பழனி அருகே துணிகரம், ஆசிரியையிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு - வீடு புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை

பழனி அருகே வீடுபுகுந்து, தூங்கி கொண்டிருந்த ஆசிரியையிடம் 7 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2019-06-27 22:15 GMT
நெய்க்காரப்பட்டி, 

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி அருகே உள்ளது அ.கலையம்புத்தூர் கிராமம். இங்குள்ள மேற்குத்தெருவில் வசித்து வருபவர் மாசிலாமணி. ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருடைய மனைவி பார்வதி (வயது 80). இவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆவார்.

நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நள்ளிரவு வேளையில் வீட்டின் பின்பக்கம் வழியாக மாசிலாமணி வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். பின்னர் அவர்கள் பார்வதி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர். எனவே பார்வதி திருடன்...திருடன்... என கூச்சல் போட்டார். இதையடுத்து சுதாரித்து கொண்ட மர்ம நபர்கள் பார்வதியின் கழுத்தில் இருந்து சங்கிலியை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து மாசிலாமணி பழனி தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு புகுந்து ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பழனி சுற்று வட்டார பகுதிகளில் திருட்டு சம்பவம் அதிகரித்து வருவதாகவும், எனவே போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தி திருடர்களை பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்