பயணிகளுக்கு தடையின்றி சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை அலுவலர்களுக்கு, போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்

பயணிகளுக்கு தடையின்றி சுகாதாரமான குடிநீர் கிடைக்க அலுவலர்கள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

Update: 2019-06-27 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலாளருமான ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் தடையின்றி கிடைக்கவும், பள்ளிகள்-கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களுக்கு முன்னுரிமை அளித்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். கடைகளில் விற்பனை செய்யப்படும் குடிநீரை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும்.

டேங்கர் லாரிகள்

குடிநீர் குழாய்களில் பழுது ஏற்படும் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் நாகை உதவி கலெக்டர் கமல்கிஷோர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கருணாகரன், நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆய்வு

அதனை தொடர்ந்து நாகை புதிய பஸ் நிலையத்தில் நேர காப்பாளர் அலுவலகம், பஸ் முன்பதிவு அலுவலகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு முதன்மை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பினையும், சுகாதாரத்தினையும் உறுதி செய்யும் வகையில் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

பஸ் நிலைய வளாகத்தில் பயணிகளுக்கான பொது கழிப்பிடம், குடிநீர் குழாய்கள் மற்றும் நடைமேடை உள்ளிட்ட பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க வேண்டும். பயணிகளுக்கு தடையின்றி சுகாதாரமான குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

மேலும் செய்திகள்