குடிநீர் பிரச்சினையை தீர்க்காத தமிழக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் 2-ந் தேதி ஆர்ப்பாட்டம் முத்தரசன் பேட்டி

குடிநீர் பிரச்சினையை தீர்க்காத தமிழக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு வருகிற 2-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முத்தரசன் கூறினார்.;

Update: 2019-06-27 23:00 GMT
திருத்துறைப்பூண்டி,

தமிழகத்தில் மழை பெய்யாததாலும், கடுமையான வறட்சியாலும் நிலத்தடி நீர் குறைந்து குளங்கள், ஆறுகளில் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் கால்நடைகளும் தண்ணீர் இல்லாததால் உயிரிழக்கும் சூழல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அடுத்த மாதம்(ஜூலை) 2-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் ஆகிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் பல லட்சம் விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழந்து இடம்பெயரும் சூழல் வரும். டெல்டா மாவட்டம் பாலைவனமாக மாறும். ஆகையால் மத்திய அரசு இந்த திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும் என்று மத்திய அரசை, மாநில அரசும் வலியுறுத்த வேண்டும்.

கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. டெல்டா மாவட்டத்தில் விவசாயம் முற்றிலுமாக நடைபெறாமல் தண்ணீர் இல்லாமல் அழியும் சூழல் உள்ளது. காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியும் கர்நாடக அரசு தண்ணீர் தர மறுக்கிறது. கர்நாடக அரசை தண்ணீர் வழங்க சொல்லி வற்புறுத்தவும் இல்லை. தேவையில்லாமல் காவிரி நதிநீர் ஆணையம் மாதாமாதம் கூடுவது தேவையற்றது.எனவே தமிழக விவசாயிகளை கருத்தில் கொண்டு கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். மாநில அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்