தூத்துக்குடி கடலில் மாயமானவர், விசைப்படகு வலையில் சிக்கிய சங்குகுளி மீனவர் பரிதாப சாவு - உடலை பார்த்து உறவினர்கள் கதறல்

தூத்துக்குடி கடலில் மாயமான சங்குகுளி மீனவர் விசைப்படகு வலையில் சிக்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

Update: 2019-06-26 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தை சேர்ந்தவர் ஜோசப் சேகர். இவருடைய மகன் சந்தீஸ்டன் (வயது 23). இவர் திரேஸ்புரத்தில் இருந்து கடந்த 24-ந் தேதி காலையில் 8 பேருடன் சங்கு குளிக்க நாட்டுப்படகில் சென்றார். அவர்கள் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவில் சங்கு குளித்து கொண்டு இருந்தனர்.

சந்தீஸ்டன் கடலுக்குள் மூழ்கி சங்கு குளித்துக் கொண்டு இருந்தபோது, அந்த வழியாக வந்த விசைப்படகு மீனவர்கள் வலையில் சந்தீஸ்டன் சிக்கி உள்ளார். இதில் அவர் கடலுக் குள் மூழ்கி மாயமானார்.

இதைத்தொடர்ந்து நாட்டுப்படகு மீனவர்கள், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் காணாமல் போன சந்தீஸ்டனை தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் வான்தீவு கரையோரத்தில் சந்தீஸ்டன் உடல் ஒதுங்கி இருப்பதாக மீனவர் களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வான்தீவு கரையோரத்தில் ஒதுங்கி இருந்த சந்தீஸ்டன் உடலை மீனவர் கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். எனவே, அவர் விசைப்படகு வலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார், சந்தீஸ்டன் உடலை பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் திரேஸ்புரம் கடற்கரையில் ஏராளமான மீனவர்கள் திரண்டு இருந்தனர். உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் திரேஸ்புரம் பகுதி சோகமே உருவாக காட்சி அளித்தது.

நேற்று 2-வது நாளாக விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. அதே நேரத்தில் இறந்த சந்தீஸ்டன் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாட்டுப்படகு மீனவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சந்தீஸ்டன் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்