கொடைக்கானல் நகரின் குடிநீர் தேவைக்காக-மனோரஞ்சிதம் அணையில் தண்ணீர் திறப்பு

கொடைக்கானல் நகரின் குடிநீர் தேவையை தீர்க்கும் பொருட்டு மனோரஞ்சிதம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2019-06-26 22:30 GMT
கொடைக்கானல், 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. இதனால் நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 9.1 அடியாகவும் (மொத்த உயரம் 21 அடி) புதிய அணையான மனோரஞ்சிதம் அணையின் நீர்மட்டம் 10.7 அடியாகவும் (மொத்த உயரம் 36 அடி) உள்ளது. இதில் பழைய அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு 5 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு புதிய அணையில் உள்ள தண்ணீரை திறந்துவிட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி நேற்று அணையின் மதகை இயக்கி தண்ணீரை நகராட்சி ஆணையர் முருகேசன் திறந்து வைத்தார். இந்த தண்ணீர் பழைய அணைக்கு செல்லும். இதன்மூலம் பழைய அணையின் நீர்மட்டம் கணிசமாக உயரும்.

இதுகுறித்து ஆணையர் முருகேசன் கூறுகையில் ‘கொடைக்கானல் நகருக்கு பழைய அணையில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மனோரஞ்சிதம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் 2 நாட்களுக்கு திறக்கப்பட உள்ளது.

அத்துடன் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் மோட்டார்கள் வைத்து குடிநீரை உறிஞ்சுவது கண்டுபிடிக்கப்பட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்