அரசு வேலை மறுக்கப்படுவதாக புகார், இந்திய குடியுரிமை கேட்டு கலெக்டரிடம் இலங்கை அகதிகள் மனு
திருவண்ணாமலை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் தங்களுக்கு அரசு வேலை மறுக்கப்படுவதால் இந்திய குடியுரிமை வழங்கும்படி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை தாலுகா அத்தியந்தல் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சுமார் 100 பேர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் 30ஆண்டுகளாக இந்த முகாமில் அகதிகளாக வாழ்ந்து வருகிறோம். சுமார் 70 குடும்பத்தினர் இந்த முகாமில் வசிக்கிறோம். இந்திய மண்ணில் வாழ விருப்பம் தெரிவிக்கும் எங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.
குடியுரிமை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் அரசு தரப்பில் வாதாடிய வக்கீல் எங்களை சட்ட விரோத குடியேறிகள் என்றும், அதனால் குடியுரிமை கோரும் உரிமை எங்களுக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார்.
1990-ம் ஆண்டு எங்களுடைய உடைமைகள் அனைத்தும் இலங்கையில் அழிக்கப்பட்டது. வீடு வாசல்கள் மீது குண்டு மழை பொழியப்பட்டு அனைத்தும் அழிக்கப்பட்டது. நாங்கள் உடுத்தியிருந்த ஆடைகளுடன் இங்கு தஞ்சம் புகுந்தோம்.
இவ்வாறு இன்னொரு நாட்டுக்கு வரும்போது எங்களை அழித்துக் கொண்டிருக்கும் அரசிடம் விசா வழங்குங்கள் என எப்படி கேட்கமுடியும்.
குடியுரிமை இல்லாததால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். அரசு வேலை மறுக்கப்படுகிறது. எனவே நாங்கள் தனியார் நிறுவனங்களில் குறைந்த சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.