மராட்டியத்தில் 2 மந்திரிகள் மீது முறைகேடு புகார்
மராட்டிய மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல், சுபாஷ் தேஷ்முக் ஆகியோர் மீது எதிர்க்கட்சிகள் முறைகேடு புகார் தெரிவித்து உள்ளன.
மும்பை,
மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் மீது முறைகேடு புகாரை தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநில வருவாய் துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் இருவேறு நில முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளார். முதல் சம்பவத்தில், புனே மாவட்டம் ஹவேலி தாலுகாவில் உள்ள கோவில் நிலம் ஒன்று ராதாசாமி சத்சங் அமைப்புக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டு உள்ளது.
அந்த நிலத்தை சங்கத்தின் பெயருக்கு மாற்றி தருமாறும், அது விவசாயத்துக்கு பயன்படாத நிலம் என்று சான்று வழங்கும்படியும் அந்த அமைப்பு கோரியிருந்தது. ஆனால், அதற்காக அடிப்படை கட்டணம் எதுவும் செலுத்தாத காரணத்தினால், அந்த கோரிக்கையை வருவாய் கமிஷனர் நிராகரித்தார். இதையடுத்து மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அந்த நிலத்தை சம்பந்தப்பட்ட அமைப்புக்கு ரூ.84 கோடிக்கு விற்க அனுமதி அளித்தார். இதனால் அடிப்படை கட்டணமாக வரவேண்டிய ரூ.42 கோடி அரசின் கருவூலத்துக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது.
கட்டுமான அதிபருக்கு...
2-வது சம்பவத்தில் புனே பாலேவாடியில் கடடுமான அதிபர் ஒருவர், விளையாட்டு மைதானத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து உள்ளார். அந்த கட்டுமான அதிபருக்கு ஆதரவாக மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் செயல்பட்டு உள்ளார்.
எனவே இந்த முறைகேடு புகார்களில் சிக்கி உள்ள மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மந்திரி மறுப்பு
ஆனால் தன் மீதான புகாருக்கு மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் மறுப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஹவேலி தாலுகாவில் உள்ள நிலம் 1885-ம் ஆண்டின் நில ஆவணத்தின்படி, கோவில் நிலம் என்று குறிப்பிடப்படவில்லை. எனவே அதற்கு அடிப்படை கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை. 2-வது சம்பவத்தில் அப்படி ஒரு முறைகேடு நடக்கவே இல்லை” என்றார்.
முன்னதாக நேற்று முன்தினம் மந்திரி மீதான முறைகேடு புகாரை சட்டசபையில் ஜெயந்த் பாட்டீல் எழுப்பினார். ஆனால் உரிய நோட்டீஸ் எதுவும் கொடுக்காமல் பேச முயன்றதால், அதற்கு அனுமதி அளிக்க சபாநாயகர் ஹரிபாவு பாக்டே மறுப்பு தெரிவித்து விட்டார்.
கூட்டுறவு மந்திரி
இதற்கிடையே கூட்டுறவுத்துறை மந்திரி சுபாஷ் தேஷ்முக் நடத்தி வரும் கூட்டுறவு நிறுவனம் ஒன்று அரசிடம் இருந்து சட்டவிரோதமாக ரூ.24 கோடியை மானியமாக பெற்று இருப்பதாக நேற்று முன்தினம் மேல்-சபையில் எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த பால்வளத்துறை மந்திரி அர்ஜூன் கோட்கர், “சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனம் நேர்மையானது, குறிப்பிட்ட மானியத்தை அந்த நிறுவனம் அரசிடம் திரும்ப செலுத்தி விட்டது” என்றார்.
அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக பேசியதால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் மேல்-சபை கூட்டம் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் 2 மந்திரிகள் மீது முறைகேடு புகார் எழுந்து இருப்பது மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.