3 ஆண்டுகளாக ரெயில்வே பிளாட்பாரத்தில் பரிதவிப்பு: வயதான பெற்றோரை வீட்டைவிட்டு துரத்திய மகன் மனைவியுடன் கைது
போரிவிலியில் வயதான பெற்றோரை வீட்டைவிட்டு துரத்தி 3 ஆண்டுகளாக ரெயில்வே பிளாட்பாரத்தில் பரிதவிக்கவிட்ட மகனையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை போரிவிலி கிழக்கு கார்ட்டர் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரிஜேஷ் சோனி (வயது71). இவரது மனைவி சமிலிதேவி (69). இவர்களுக்கு பிரதிப் என்ற மகனும், சீமா என்ற மகளும் உள்ளனர். பிரதிப்புக்கு திருணமாகி சாந்தினி என்ற மனைவி இருக்கிறார்.
இந்தநிலையில், கடந்த 2016-ம் ஆண்டு தந்தையின் வீட்டை பிரதிப் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். மேலும் தந்தை பிரிஜேஷ் நடத்தி வந்த டீக்கடையையும் அபகரித்து கொண்டார்.
கோவிலில் தஞ்சம்
சில மாதங்கள் கழித்து பெற்றோரையும், சகோதரியையும் வீட்டை வீட்டு துரத்தி விட்டார். வீதிக்கு வந்த பிரிஜேஷ் தனது மகள், மனைவியை அழைத்து கொண்டு அருகில் உள்ள சிவன் கோவிலில் தஞ்சம் புகுந்தார்.
கோவிலில் இடம் பற்றாக்குறை காரணமாக பிரிஜேஷ் சோனி போரிவிலி ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி இருந்தார். மேலும் அவர்கள் மகனிடம் இருந்து வீட்டை மீட்டு தரும்படி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
கைது
இதுபற்றி அறிந்த பிரதிப் வீட்டை தர மறுத்து பெற்றோரை தாக்கி உள்ளார். பின்னர் பிரிஜேஷ் சோனி மந்திராலாயா சென்று சமூகநீதி பொறுப்பு மந்திரி ராஜ்குமார் படோலேயை சந்தித்து புகார் அளித்தார். அவர் பிரதிப் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மந்திரியின் உத்தரவின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்றோரை வீட்டை விட்டு விரட்டி துன்புறுத்திய பிரதிப் மற்றும் அவரது மனைவி சாந்தினியை கைது செய்தனர். பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு இருவரையும் வருகிற 1-ந் தேதி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து கணவர், மனைவி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.