விழுப்புரத்தில், இடி-மின்னலுடன் பலத்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.;

Update: 2019-06-26 22:45 GMT
விழுப்புரம், 

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த 2 வார காலமாக வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. அத்துடன் ஆங்காங்கே வெப்பச்சலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் விழுப்புரத்தில் கடந்த 4 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. மாலை, இரவு வேளையில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. நேற்றும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்ட நிலையில் மாலை 3 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்த சூழலில் 5 மணியளவில் பலத்த சூறைக்காற்று வீசியது. 5.30 மணி முதல் பயங்கர இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை வெறும் 20 நிமிடம் மட்டுமே கொட்டி தீர்த்துவிட்டு அதன் பிறகு ஓய்ந்தது. இந்த மழையினால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. திடீரென பெய்த இந்த மழையினால் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். இதேபோல் காணை, பெரும்பாக்கம், கோலியனூர், நன்னாடு, பிடாகம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களிலும் மற்றும் விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையே பலத்த காற்றின் போது, விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலகம் முன்பு அரச மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்ததில், அப்பகுதியில் நின்று கொண்டிருந்த கார் மீது விழுந்தது. இதில் காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

மேலும் செய்திகள்