ராமநகரில் பரபரப்பு கால்வாயில் வீசப்பட்ட 2 வெடிகுண்டுகள் சிக்கியது பயங்கரவாதி கொடுத்த தகவலின் பேரில் அதிகாரிகள் அதிரடி
பயங்கரவாதி கொடுத்த தகவலின் பேரில் அதிரடியாக செயல்பட்ட அதிகாரிகள், ராமநகரில் கால்வாயில் வீசப்பட்ட 2 வெடிகுண்டுகளை கைப்பற்றினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநகர்,
மேற்கு வங்காள மாநிலம் பர்த்வான் மாவட்டம் காக்ராகிராப்பில் உள்ள ஒரு வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்கும் போது, வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில் 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு நடந்திருந்தது. இதுகுறித்து தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டுகளை “ஜமாத் உல் முஜாகித்தீன் வங்காளதேசம்“ என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தயாரித்தது தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து, அந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளை தேடும் பணியில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் பெங்களூரு புறநகரில் பதுங்கி இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா டவுன் சிக்பேட்டையில் பதுங்கி இருந்த பயங்கரவாதியான ஹபிப்பூர் ரகுமான் என்ற சேக்(வயது 30) என்பவரை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தார்கள். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு 5 நாட்கள் காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 வெடிகுண்டுகள் சிக்கியது
இந்த நிலையில், பயங்கரவாதி ஹபிப்பூர் ரகுமானிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது, ராமநகர் மாவட்டத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வீசியதாக தெரிவித்தார். இதை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நேற்று காலையில் ஹபிப்பூர் ரகுமான் கூறிய தகவலின் பேரில் ராமநகர் மாவட்டம் திப்புநகரில் உள்ள சாக்கடை கால்வாயில் தேசிய புலனாய்வுத்துறை, உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில், நீண்ட நேர சோதனைக்கு பின்பு நேற்று மதியம் கால்வாயில் உள்ள புதரில் ஒரு சிறிய அட்டை பெட்டி கிடந்தது. அந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்த போது, அதற்குள் 2 வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ந்து போய் விட்டனர். அந்த 2 வெடிகுண்டுகளும் சக்தி வாய்ந்தவை என்பதும், வெடிக்கும் திறன் கொண்டவை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
மக்கள் பீதி
அதே நேரத்தில் சாக்கடை கால்வாயில் மேலும் சில வெடிகுண்டுகள் கிடக்கலாம் என்பதால், அதனை தேடும் பணியில் அதிகாரிகளும், போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டுகள் சிக்கியதை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் இருந்து திப்புநகருக்கு வெடிகுண்டு நிபுணர்கள் சென்றுள்ளனர். அவர்கள், அந்த 2 வெடிகுண்டுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில், திப்புநகரில் உள்ள கால்வாயில் 2 வெடிகுண்டுகள் சிக்கியதாலும், வெடிகுண்டுகளை தேடும் பணி நடப்பதாலும் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். அந்த கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக வெடிகுண்டுகள் சிக்கியது பற்றி அறிந்ததும் ராமநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேத்தன் சிங் ராத்தோடு திப்புநகருக்கு விரைந்து சென்றார். பின்னர் அவர், தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளுடன் வெடிகுண்டுகள் சிக்கியது குறித்து ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில், கால்வாயில் வெடிகுண்டுகள் சிக்கியது எப்படி? என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாசவேலையில் ஈடுபட...
அதாவது கடந்த ஆண்டு(2018) ராமநகர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த ஜமாத் உல் முஜாகித்தீன் வங்காளதேசம் எனப்படும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த முனீர் என்ற கவுசார் என்பவரை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்திருந்தனர். அவரிடம் இருந்து கோவில்கள், மசூதிகளின் வரைபடங்கள், வெடிப்பொருட்கள் சிக்கி இருந்தது. தற்போது கைதாகி உள்ள ஹபிப்பூர் ரகுமானும், முனீரும் ஒரே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதால், 2 பேரும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். முனீர் ராமநகரிலும், ஹபிப்பூர் ரகுமான் தொட்டபள்ளாப்புராவிலும் தங்கி இருந்துள்ளனர்.
கடந்த ஆண்டு முனீர் கைது செய்யப்பட்டதும், அவரது மனைவியை ஹபிப்பூர் ரகுமான் சந்தித்து பேசியதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் முனீரின் மனைவி வெடிகுண்டுகளை ஹபிப்பூர் ரகுமானிடம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வெடிகுண்டுகளை தான் திப்புநகரில் உள்ள கால்வாயில் ஹபிப்பூர் ரகுமான் வீசியதாக கூறப்படுகிறது. ஆனால் என்ன காரணத்திற்காக அந்த வெடிகுண்டுகளை கால்வாய்க்குள் அவர் வீசினார்?, நாசவேலையில் ஈடுபடுவதற்காக பதுக்கி வைத்தாரா? என்பது தெரியவில்லை. அதுகுறித்து ஹபிப்பூர் ரகுமானிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். வெடிகுண்டுகள் சிக்கிய சம்பவம் ராமநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.