குடிநீர் திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளித்து அதிகாரிகள் செயல்பட வேண்டும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளித்து அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ்பாபு அறிவுறுத்தினார்.

Update: 2019-06-26 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் பஞ்சப்பள்ளி சின்னாறு அணை, புலிகரை ஏரி, அதகப்பாடி, சின்னதடங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டபணிகள் மற்றும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யும் பணிகளை தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளரும், தர்மபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சந்தோஷ்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தினமும் குடிநீர் கிடைக்கிறதா? ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் சீராக நடைபெறுகிறதா? என்பது குறித்து பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

புலிகரை ஏரியில் நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனம் மூலம் ரூ.55 லட்சம் மதிப்பில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை அவர் பார்வையிட்டார். பஞ்சப்பள்ளி சின்னாறு அணையை பார்வையிட்ட அவர் அங்கிருந்து ரூ.45 லட்சம் மதிப்பில் குழாய்கள் அமைத்து தர்மபுரி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பணியை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளரும் தர்மபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சந்தோஷ்பாபு பேசியதாவது:-

நிதி ஒதுக்கீடு

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகள், 251 ஊராட்சிகள் என மொத்தம் 3191 கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. முன்பு 57 மில்லியன் லிட்டராக வினியோகிக்கப்பட்ட குடிநீர் தற்போது நிலவும் வறட்சியை கருத்தில் கொண்டு 65 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால் குடிநீர் பிரச்சினையை எளிதில் தீர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வினியோகம் செய்யும் ஆழ்துளை கிணறுகளில் மோட்டார்கள் பழுது ஏற்பட்டால் 24 மணி நேரத்திற்குள் சீரமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் 636 பணிகளை மேற்கொள்ள ரூ.20.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதில் 443 பணிகள் நிறைவடைந்து உள்ளன. 193 பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 14-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.7.72 கோடி மதிப்பீட்டில் 312 பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு 149 பணிகள் நிறைவு பெற்று உள்ளன. மீதமுள்ள பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

முன்னுரிமை

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 31 ஏரிகளில் ரூ.3.83 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரின் அறிவுரைப்படி ரூ.3.73 லட்சம் மதிப்பில் குடிநீர் திட்ட பணிகள் தயாரித்து முதல்-அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முறைகேடாக மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பதை தடுக்க பிளோ கண்ட்ரோல் வால்வுகள் பொருத்தப்பட்டு உள்ளன. குடிநீர் திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளித்து அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி, மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், உதவி கலெக்டர் சிவன்அருள், திட்ட இயக்குனர் காளிதாசன், ஒகேனக்கல் குடிநீர் திட்ட நிர்வாக செயற்பொறியாளர் சங்கரன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் நாசர் செரீப், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஜீஜாபாய், தாசில்தார் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்