டீக்கடைக்குள் புகுந்து பெண்ணிடம் 9½ பவுன் நகை பறிப்பு கண்காணிப்பு கேமராவில் பதிவான நபருக்கு போலீஸ் வலைவீச்சு

ஆரல்வாய்மொழி அருகே டீக்கடைக்குள் புகுந்து பெண்ணிடம் 9½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். திருடிய மர்மநபரின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

Update: 2019-06-26 23:15 GMT
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே அனந்தபத்மநாபபுரம் ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 60). இவருடைய மனைவி புஷ்பம் (55). இவர்கள் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றனர். புஷ்பம் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு கடையை திறப்பது வழக்கம். நேற்று அதிகாலை அவர் வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார். டீக்கடையில் சிகரெட் உள்ளிட்ட பொருட்களையும் வைத்து அவர் வியாபாரம் செய்தார். உறவினர் ஒருவர் டீ குடித்துக் கொண்டிருந்தார்.

நகை பறிப்பு

அப்போது, 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் மோட்டார் சைக்கிளில் கடைக்கு வந்தார். அங்கு அவர் புஷ்பத்திடம் சிகரெட் கேட்டார். புஷ்பமும், அவருக்கு சிகரெட் கொடுத்தார். பின்னர் சிகரெட்டை பற்ற வைக்க தீப்பெட்டி கேட்டார். உடனே புஷ்பம், தீப்பெட்டியை எடுக்க கடைக்குள் திரும்பினார்.

அந்த சமயத்தில் மர்மநபர் கடைக்குள் புகுந்து புஷ்பம் அணிந்திருந்த 9½ பவுன் நகையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளை நோக்கி ஓட்டம் பிடித்தார். உடனே, புஷ்பம் திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டபடி அந்த நபரை பிடிக்க முயன்றார். ஆனால் மர்மநபர் தப்பி விட்டார். தப்பிக்கும் முயற்சியின் போது மர்மநபர் அவருடைய மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டார். இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேமராவில் பதிவு

பின்னர் இதுகுறித்து புஷ்பம் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, அதில் நகை பறிப்பில் ஈடுபட்ட நபரின் உருவம் பதிவாகி இருப்பது தெரியவந்தது. அந்த பதிவுகளை போலீசார் கைப்பற்றினர். மேலும், அந்த நபர் வந்த மோட்டார் சைக்கிளும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் மோட்டார் சைக்கிளை சோதனை செய்ததில், அதில் செல்போனும் இருந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் அதன் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன், மோட்டார் சைக்கிளையும், செல்போனையும் விட்டு சென்றதால் அவரை விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்