வானவில் : கார்களும் குதிரை திறனும்
இது ஏதோ திரைப்படத்தின் தலைப்பு என்று நினைக்க வேண்டாம். மோட்டார் சைக்கிள் மற்றும் கார் வைத்திருக்கும் அனைவருக்கும் பரீட்சயமான வார்த்தைதான் ‘ஹார்ஸ் பவர்’ எனப்படும் குதிரைத் திறன். வாகனங்களின் வேகத்தை நிர்ணயிப்பவையும் இவைதான்.
குதிரைத் திறன் அதிகம் கொண்ட வாகனங்களின் வேகம் அதிகரிப்பது இயல்பானதே. இதைப்பற்றிய சுவாரசியமான தகவல்களைப் பார்க்கலாம்.
குதிரைத் திறன் என்ற பிரயோகத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ்வாட். இவர் வேறு யாருமல்ல நீராவி என்ஜினைக் கண்டுபிடித்த பொறியாளர்தான்.
தான் உருவாக்கிய நீராவி எந்திரம் எந்த அளவுக்கு பொருள்களை இழுத்துக் கொண்டு எவ்வளவு வேகத்தில் செல்லும் என்பதை நிரூபிக்க, என்ஜினின் செயல் திறனை அளவிட வேண்டியிருந்தது.
அந்தக் காலங்களில் சாரட் வண்டிகளில் குதிரைகள் பூட்டப்பட்டு இயக்கப்பட்டன. சாரட்டுக்கு மாற்றாக வந்த ஆட்டோமொபைல் வாகனங்களின் செயல்திறனை கணக்கிட குதிரையின் வேகத்தை அளவிட அவர் முடிவு செய்தார்.
நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரியை மேலே இழுத்து வருவதற்கு குதிரைகள் பயன்படுத்தப்பட்டன.
அதைக் கருத்தில் கொண்டு 149 கிலோ எடையை சுமந்து கொண்டு 100 அடி தூரத்தை ஒரு நிமிடத்தில் கடப்பதை ஒரு குதிரைத் திறன் (1 ஹெச்.பி.) என அவர் கணக்கிட்டார்.
உசேன் போல்ட்
மனிதர்கள் எந்த அளவுக்கு குதிரைத் திறனை வெளிப்படுத்த முடியும் என்றும் சோதித்து பார்க்கப்பட்டது. உலகிலேயே மின்னல் வேக வீரர் என பெயர் பெற்ற ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்டின் குதிரைத் திறன் 3.5 ஹெச்.பி. என கணக்கிடப்பட்டுள்ளது. இவர் 100 மீட்டர் தூரத்தை 9.58 விநாடிகளில் கடந்ததை வைத்து அவரிடம் உள்ள குதிரைத் திறன் மதிப்பிடப்பட்டுள்ளது.
சி.சி.யும், ஹெச்.பி.யும்
மோட்டார் சைக்கிளைப் பொருத்தமட்டில் அதன் வேகம் சி.சி. என குறிப்பிடப்படுகிறது. சி.சி. என்பது கியூபிக் சென்டி மீட்டராகும். சிலிண்டரின் அளவை சி.சி.யால் மதிப்பிடுகின்றனர். ஒரு காரில் 500 சி.சி. அளவில் நான்கு சிலிண்டர் இருந்தால் அதன் திறன் 2,000 சி.சி. ஆகும். அதாவது இதை 2 லிட்டர் என்ஜின் கொண்ட கார் என்பர்.
என்ஜின் அளவை நிர்ணயிப்பது சி.சி. அதன் ஒட்டுமொத்த வேகத்தைக் கணக்கிடுவது குதிரைத்திறன் எனப்படும் ஹெச்.பி.ஆகும். 2000 சி.சி. என்ஜின் 65 ஹெச்.பி. வேகத்தை வெளிப்படுத்தும் என்பதே அளவீடாகும். ஆனால் இன்று 2 லிட்டர் என்ஜின் 250 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும் அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறிஉள்ளது. 14 முதல் 17 சி.சி. திறன் என்பது ஒரு குதிரைத் திறனுக்கு இணையானது.