வானவில் : குழந்தைகளுக்கான நவீன பாதுகாப்பு இருக்கை மெர்சிடஸ் பென்ஸ் தயாரிக்கிறது

குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சொகுசு கார்களைத் தயாரிக்கும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் கார்களில் குழந்தைகளுக்கான இருக்கைகளில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய இருக்கைகளை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2019-06-26 06:21 GMT
இந்த இருக்கையின் பாதுகாப்பு அம்சங்கள் தற்போது சோதித்துப் பார்க்கப்பட்டு வருகின்றன. இதில் உள்ள சீட் பெல்ட்கள், விபத்து நடப்பதற்கு முன்பாக குழந்தைகளை இருக்கிப் பிடித்துக் கொள்ளும் வகையில் இருக்கும். குழந்தைகளின் செயல்பாடு, அவை வெளிப்படுத்தும் அசைவுகள், சைகைகள் ஆகியவற்றை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இந்த இருக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கார்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆராய்ச்சிப் பிரிவை 50 ஆண்டுகளுக்கு முன்பு மெர்சிடஸ் பென்ஸ் உருவாக்கியது. இந்த மையம் பயணிகள் பாதுகாப்புக்கென தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு புதிய புதிய நுட்பங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் குழந்தைகள் பாதுகாப்புக்கென புதிய நுட்பம் கொண்ட சீட்டை உருவாக்கியுள்ளது.

4 வயது வரையிலான குழந்தைகள் இந்த இருக்கையில் பொருந்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் இணைப்புடன் இந்த இருக்கை தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் தனியாக இந்த இருக்கையை மட்டும் கண்காணிக்கும் வசதியை உருவாக் கலாம்.

கார் பாதுகாப்பற்ற வகையில் இயங்குவதாக உணர்ந்தாலே இந்த பாதுகாப்பு சீட் செயல்படத் தொடங்கிவிடும். லேசாக பட்டும் படாமல் பிடித்துள்ள சீட் பெல்ட் கெட்டியாக பிடிக்கும் வகையில் இறுகத் தொடங்கும். அடுத்து 6 விதமான பாதுகாப்பு கவசங்களும் செயல்படத் தொடங்கும். குழந்தை தூங்கிக் கொண்டிருந்தால் குழந்தையின் உடல் வெப்ப நிலை, சீரான சுவாசம் உள்ளதா உள்ளிட்ட விவரங்களையும் இதில் உள்ள சென்சார் கண்காணிக்கும். தூக்கத்திலிருந்து குழந்தை விழித்துவிட்டால், குழந்தை என்ன செய்கிறது என்பன போன்ற விவரம் காரை ஓட்டுபவருக்கு தெரிவிக்கும்.

காரை தாய் ஓட்டிக் கொண்டிருந்தால், அவருக்கு இத்தகைய வசதிகள் மிகவும் உபயோகமாக இருக்கும். ஒரு வேளை குழந்தை காரில் பயணிக்கிறது, பெற்றோர்கள் வேறு இடத்தில் இருப்பதாக இருந்தால், அவர்களுக்கு ஸ்மார்ட்போன் மூலம் தகவலை பரிமாற முடியும். மெர்சிடஸ் மி ஆப் எனும் செயலி இதற்கு உதவியாக உள்ளது. இனிவரும் புதிய மாடல் கார்களில் இத்தகைய வசதி இடம்பெறலாம்.

இதேபோன்ற வசதியை பிற நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

மேலும் செய்திகள்