தனியார் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்ட மணல் குவியல் - வருவாய்த்துறையினர் விசாரணை
தனியார் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மணல் குவியல் குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி,
தேனி அல்லிநகரத்தில் விவசாய பாதுகாப்பு நலச்சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் சார்பில் அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் மலையடிவார பகுதியில் விளை பயிர்கள் பாதுகாப்பு குறித்து ரோந்து மேற்கொள்ளப்படும். இதற்காக வீரப்பஅய்யனார் கோவில் செல்லும் வழியில் கருப்பசாமி கோவில் அருகில் விவசாயிகள் சோதனை சாவடி அமைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு இந்த சோதனை சாவடியை கடந்து ஒரு டிராக்டர், ஒரு ஆட்டோ மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆட்கள் சென்றுள்ளனர். அவர்கள் திருட்டுத்தனமாக மணல் அள்ளுபவர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த விவசாயிகள் சிலர் அந்த வாகனங்களை பின்தொடர முயன்றுள்ளனர். ஆனால், அந்த வாகனங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் நேற்று விவசாயிகள் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வீரப்ப அய்யனார் கோவில் செல்லும் வழியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் சுமார் 15 யூனிட் மணல் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து விவசாயிகள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
தேனி தாசில்தார் பிரதீபா தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் அருகில் உள்ள பனசலாறு பகுதியில் ஆய்வு செய்தபோது அங்கு இருந்து மணல் அள்ளப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த மணலை யார் பதுக்கி வைத்தார்கள்? என்பது குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மணலை அள்ள யாரும் வருகிறார்களா? என்பதை கண்காணிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் சிலரும், விவசாயிகள் சிலரும் அப்பகுதியில் மறைந்து இருந்தனர். நேற்று மாலையில் மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் அந்த வழியாக வந்தார். அந்த வாலிபர், அதிகாரிகள் இருப்பதை பார்த்து மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அவரை விவசாயிகள் துரத்தி பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதற்கிடையே அவரை போலீஸ்காரர் ஒருவர் தனது காரில் ஏற்றி அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் மணல் அள்ளி பதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.