மதுரையில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த கும்பல் சிக்கியது

மதுரையில் நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றித்திரிந்த 7 பேர் கொண்ட கும்பல் சிக்கியது.

Update: 2019-06-25 22:00 GMT

மதுரை,

மதுரையில் கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் இரவில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் எஸ்.எஸ்.காலனி போலீசார் பைபாஸ் ரோடு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒரு கார் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றது.

உடனே போலீசார் விரைந்து சென்று அந்த காரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் சொக்கலிங்கநகரை சேர்ந்த மகேந்திரன்(வயது 40), ஆரப்பாளையம் கண்மாய்கரை உதயகுமார்(30), காளவாசல் பாண்டி(21), புதுஜெயில்ரோடு முரட்டன்பத்திரி ஆனந்தராஜ்(21), சம்மட்டிபுரம் அருண்குமார்(21), முத்துப்பாண்டி(22), மதுரை மாவட்டம் கருமாத்தூர் அஜீத்குமார்(21) ஆகியோர் கொண்ட கும்பல் காரில் வந்தது தெரியவந்தது.

பின்னர் போலீசார் அந்த காரை சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர். அதில் 2 கத்தி, 2 அரிவாள், 2 மிளகாய் பொடி பாக்கெட், உருட்டு கட்டைகள் போன்றவை காரின் டிக்கியில் இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் அனைவரையும் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில் அவர்கள் இரவில் பைபாஸ் ரோட்டில் வருபவர்களை ஒன்று கூடி மறைத்து ஆயுதங்களை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க வந்ததாகவும், தங்களை யாராவது எதிர்த்தால் அவர்களை ஆயுதங்களால் தாக்கவும் திட்டமிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 7 பேரையும் கைது, அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் 7 செல்போன்கள், ரூ.41 ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது வேறு ஏதானும் வழக்கு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்