15 நாட்கள் தாமதத்திற்கு பிறகு மும்பையில் பருவமழை தொடங்கியது வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

15 நாட்கள் தாமதத்திற்கு பிறகு மும்பையில் பருவமழை தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Update: 2019-06-25 23:15 GMT
மும்பை,

மராட்டியத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 4 மாதம் பருவமழை காலம் ஆகும். மும்பையில் வழக்கமாக ஜூன் 10-ந் தேதி பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை தாமதமாகவே தொடங்கும் என ‘ஸ்கைமெட்’ என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இதன்படி மும்பையில் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த வாயு புயல் காரணமாக பரவலாக மழை பெய்தது.

மும்பை பெருநகரம் குடிநீருக்காக பருவமழையை தான் நம்பி இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்துவிட்டது. வெறும் 5 சதவீத தண்ணீரே இருப்பு உள்ளது. இந்த தண்ணீரை ஒரு மாத தேவைக்கே பயன்படுத்த முடியும்.

எனவே பருவமழை தாமதம் மும்பைவாசிகளை கலக்கமடைய செய்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொழிவை மும்பைவாசிகள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்தநிலையில், 15 நாட்கள் தாமதத்திற்கு பிறகு நேற்று மும்பையில் பருவமழை பெய்ய தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மும்பை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த வருடம் பருவமழை நீண்ட நாட்கள் தாமதமாக தொடங்கி உள்ளது. 2009-ம் ஆண்டு ஜூன் 27-ந் தேதி பருவமழை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மும்பயைில் நேற்று வானில் கருமேகங்கள் திரண்டு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. பருவமழை பெய்ய தொடங்கி இருப்பது மும்பைவாசிகளை மகிழ்ச்சியடைய செய்து உள்ளது.

மேலும் செய்திகள்