கடன் வாங்கி தருவதாக பள்ளி தாளாளரிடம் ரூ.1¼ கோடி மோசடி புகார்; சினிமா தயாரிப்பாளர் மகனுடன் கைது

கடன் வாங்கி தருவதாக கூறி தனியார் பள்ளி தாளாளரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்ததாக சினிமா தயாரிப்பாளர் மற்றும் அவருடைய மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-25 22:30 GMT
சிவகங்கை,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவர் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் ஆவார். கடந்த 2018-ம் ஆண்டு தனது பள்ளியை விரிவுபடுத்த கடன் வாங்க திட்டமிட்டதாகவும், இதற்காக அவர் காரைக்குடியை சேர்ந்த சண்முகநாதன், ராமநாதன் ஆகியோரை சந்தித்து கடன் தொகையை ஏற்பாடு செய்து தரும்படி கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்கள், மதுரையில் வசிக்கும் பாகனேரியை சேர்ந்த காளையப்பன் என்பவர் மூலம் ஒரு தொழில் அதிபரிடம் பணம் கடனாக வாங்கி தருவதாக கூறினர். மேலும் கடன் தொகை வாங்கி கொடுத்தால், அதற்கு 7 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என்று கூறினர்.

அதை நம்பிய ரமேஷ், காளையப்பனை சந்தித்து பணம் கடனாக பெற்று தரும்படி கூறி கமிஷன் தொகையாக ரூ.1 கோடியே 26 லட்சத்தை தவணை முறையில் கொடுத்தாராம். பணத்தை பெற்றுக் கொண்ட காளையப்பன் பேசியபடி கடன் தொகையை வாங்கி தரவில்லை. மேலும் வாங்கிய பணத்தையும் திரும்ப தரவில்லையாம்.

அதைத்தொடர்ந்து ரமேஷ், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்ற பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் லெட்சுமி, அருள்மொழிவர்மன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி காளையப்பன் (52), அவருடைய மகன் அய்யப்பன் மற்றும் சண்முகநாதன், ராமநாதன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் காளையப்பன் மற்றும் அவரது மகன் அய்யப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காளையப்பன் சினிமா தயாரிப்பாளராக உள்ளார். சமீபத்தில் இவர் ஒரு திரைப்படம் தயாரித்துள்ளாராம்.

மேலும் செய்திகள்