குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது
நீலாங்கரையில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தொழிலதிபர் போலீசாரை தாக்க முயன்றார். அவரை கைது செய்த போலீசார், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளனர்.
ஆலந்தூர்,
சென்னை திருவான்மியூரில் இருந்து கோவளம் நோக்கி கார் ஒன்று வேகமாக சென்றது. நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், திடீரென எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. தொடர்ந்து அந்த கார் நிற்காமல் சாலையோர இளநீர் கடைக்குள் புகுந்து சுவற்றில் மோதி நின்றது.
இதில் ஆட்டோ நொறுங்கியது. ஆட்டோ டிரைவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரிக்க முயன்றனர். அப்போது அவர் தகாத வார்த்தைகளால் பேசி போலீசாரை தாக்க முயன்று தகராறில் ஈடுபட்டார்.
கைது
பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், சென்னை திருவான்மியூரை சேர்ந்த நவீன் (வயது 30) என்பதும், இவர் பழங்களை மொத்தமாக கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.
குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதால் அடையாறு போக்குவரத்து போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் அதிபர் நவீனை கைது செய்தனர்.
மேலும் அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.