மின்கம்பியில் பழுது மீனம்பாக்கத்தில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு பயணிகள் அவதி
மின்கம்பியில் ஏற்பட்ட பழுதால் மீனம்பாக்கத்தில் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் நோக்கி நேற்று இரவு 8.30 மணிக்கு மெட்ரோ ரெயில் சென்றது. மீனம்பாக்கத்தில் இருந்து விமான நிலையம் நோக்கி செல்லும் மின்கம்பியில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் ரெயிலை மேற்கொண்டு இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டது. மீனம்பாக்கத்திலேயே பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர்.
உடனே மெட்ரோ ரெயில் அதிகாரிகள் மின்கம்பியை பரிசோதித்தனர். அப்போது உயர் மின்அழுத்தம் காரணமாக மின் கம்பியில் பழுது ஏற்பட்டதை கண்டுபிடித்தனர். இவற்றை உடனே சீரமைக்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் செல்லும் ரெயில்கள் நங்கநல்லூர் சாலை ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. மீனம்பாக்கம், விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ரெயில் சேவை துண்டிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
இதையடுத்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் நங்கநல்லூர் சாலை ரெயில் நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம், விமான நிலையம் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு பயணிகளுக்கு வேன், ஷேர் ஆட்டோக்கள் மூலம் செல்ல நடவடிக்கை எடுத்தது. இரவு நேரத்தில் திடீரென ஏற்பட்ட பழுதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.