சென்னை விமான நிலையத்தில் துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் இலங்கை வாலிபர் கைது

சென்னை விமான நிலையத்தில், துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-06-25 23:00 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்த இருப்பதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. இந்த விமானத்தில் இலங்கையை சேர்ந்த முகமது ஷபீர் (வயது 30) என்பவர் வந்தார். இவர் சென்னையில் இருந்து துபாய்க்கு செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்தார்.

இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவரது பெட்டியை சோதனை செய்தபோது அதில் துணிகளுக்கு இடையே கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

ரூ.1 கோடி வெளிநாட்டு பணம்

அதில் யூரோ கரன்சிகள், குவைத் தினார், துபாய் திர்ஹம்ஸ் ஆகியவற்றை மறைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். ரூ.1 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் முகமது ஷபீரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது விமானத்தின் அருகே அடையாளம் தெரியாத நபர் தன்னிடம் பெட்டியை தந்துவிட்டு சென்றதாக கூறினார். பிடிபட்ட பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்