சேரம்பாடி அருகே, வீடுகளை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்

சேரம்பாடி அருகே தோட்ட தொழிலாளர்கள் வீடுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.

Update: 2019-06-25 22:30 GMT
பந்தலூர், 

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே சந்தனமாகுன்னு கிராமம் உள்ளது. இங்கு ஆதிவாசி மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட வில்லை. இதனால் குடிசைகளில் வசித்து வருகின்றனர். காட்டு யானைகள் அடிக்கடி குடிசை வீடுகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி கடந்த 1 வாரமாக அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆதிவாசி மக்கள் தங்குகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு 3 காட்டு யானைகள் அப்பகுதிக்கு வந்து பொதுமக்கள் மற்றும் ஆதிவாசி மக்களின் குடிசை வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் நள்ளிரவில் பொம்மி என்ற ஆதிவாசி பெண்ணின் குடிசை வீட்டை காட்டுயானைகள் சேதப்படுத்தியன. தொடர்ந்து தும்பிக்கையை நுழைத்து குடிசைக்குள் இருந்த துணிகள், பாத்திரங்களை வெளியே வீசியது. பின்னர் தனது கால்களால் மிதித்து உடைத்தது. மேலும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றது.

பின்னர் அதிகாலையில் அங்கிருந்து காட்டு யானைகள் சென்றது. தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் சின்னதம்பி, வன காப்பாளர் ராபர்ட் வில்சன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது சேதம் அடைந்த குடிசையை சீரமைக்க இழப்பீடு தொகை தருமாறு பாதிக்கப்பட்ட ஆதிவாசி பெண் பொம்மி வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர்.இதேபோல் சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.2 தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் 7 காட்டு யானைகள் முகாமிட்டு நின்றிருந்தது. மேலும் தொழிலாளர்களின் வீட்டு மேற்கூரைகளை உடைத்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். தொடர்ந்து தானிமூலா, குந்தலாடி, ஓர்கடவு, வாழவயல் பகுதியில் 6 காட்டு யானைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் இரவில் புகுந்தது. பின்னர் விடியற்காலையில் வனத்துக்குள் சென்றது. காட்டு யானைகளின் முற்றுகையால் பொதுமக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்