ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்

ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-25 22:30 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்து உள்ளது நத்தம் கிராமம். இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 83 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆங்கில ஆசிரியராக பணியில் இருந்து வந்தவர் பாபு. திருத்தணியை சேர்ந்த இவர் பாடம் நடத்தும் முறையாலும் கனிவாக பேசும் தன்மையாலும் மாணவர்கள், பெற்றோர்கள் மனதில் இடம் பிடித்தார்.

நத்தம் கிராமத்தின் அரசு பள்ளியில் சிறப்பாக பணியாற்றி அனைவரது மனதிலும் இடம் பிடித்த ஆங்கில ஆசிரியர் பாபு, கடந்த 6-ந்தேதி அங்கிருந்து புதுகும்மிடிப்பூண்டி அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு மாற்றாக நியமிக்கப்பட்ட சுதா என்ற ஆசிரியை பணியில் சேர்ந்தவுடன் மருத்துவ விடுப்பில் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தங்கள் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு ஆங்கில ஆசிரியர் பாபுவை மீ்ண்டும் நியமிக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு, கிராம மக்கள் சார்பாக தொடர்ந்து பல மனுக்கள் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், நத்தம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளிக்கு ஆங்கில ஆசிரியர் பாபுவை மீண்டும் பணியில் அமர்த்திட வலியுறுத்தி நேற்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளியின் முன்புறமாக உள்ள சாலையில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கல்விக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும், பெற்றோர்களும் மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரி (பொறுப்பு) ரவி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ஆசிரியர் பாபுவை மீண்டும் நத்தம் அரசு நடுநிலைப்பள்ளியில் உடனடியாக பணி நியமனம் செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். இதனையடுத்து 3 மணி நேரமாக நடைபெற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மாணவர்கள் பள்ளிக்கு திரும்பிச் சென்றனர். பெற்றோர்களும் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்