நெற்பயிர்களுக்கு கழிவுநீர் பாய்ச்சும் விவசாயிகள்
விருத்தாசலம் பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நெற்பயிர்களுக்கு கழிவுநீரை பாய்ச்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விருத்தாசலம்,
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவில் பெய்ய வில்லை. இதன் காரணமாகவும் கடும் வெயிலின் தாக்கத்தாலும் பெரும்பாலான ஏரி, குளங்கள், அணைகள் வறண்டு விட்டன. நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்துக்கு சென்று விட்டதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. கடும் வறட்சியால் விவசாய பயிர்களும் கருகி வருகின்றன. இதனால் பெரும்பாலான விவசாயிகள் குறுவை சாகுபடி பணியை இன்னும் தொடங்கவில்லை.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் ஏராளமான ஏரி, குளங்கள் வறண்டு விட்டன. இதனால் ஏற்கனவே சாகுபடி செய்யப்பட்ட காய்கறி மற்றும் தானிய பயிர்கள் கருகி வருகின்றன. மேலும் ஒரு சில விவசாயிகளே குறுவை சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் விருத்தாசலம் பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பயிர்களுக்கு பாசனம் செய்ய தண்ணீர் இல்லாததால், கழிவுநீரை கொண்டு பாசனம் செய்து வருகின்றனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
விருத்தாசலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து 400 அடிக்கு கீழ்சென்று விட்டது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் பயிர் சாகுபடி செய்யாததால், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் தரிசு நிலமாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் சித்தலூர், ஆலிச்சிக்குடி பகுதி விவசாயிகள் ஆழ்துளை கிணற்றில் இருந்த குறைந்தளவு தண்ணீரை நம்பியும், மழையை எதிர்பார்த்தும் குறுவை சாகுபடி செய்தனர். ஆனால் சாகுபடி செய்த சில நாட்களிலேயே ஆழ்துளை கிணறுகள் வறண்டன. மேலும் மழையும் பெய்யவில்லை.
இதையடுத்து விருத்தாசலம் நகர பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, விவசாயிகள் தங்களது நிலத்தில் உள்ள வாய்க்காலுக்கு திருப்பி நெற்பயிர்களுக்கு பாசனம் செய்து வருகின்றனர். இதில் நெற்பயிர்கள் தற்போது நன்கு வளர்கிறது. இந்த கழிவுநீர் மூலம் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பருவமழை போதிய அளவில் பெய்யாததால் விருத்தாசலம் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்த நாங்கள், தற்போது கழிவுநீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பாசனத்துக்கு தேவையான கழிவுநீர் கூட கிடைக்கவில்லை. வருணபகவான் கருணை காட்டினால் தான் நாங்கள் பயிர் செய்துள்ள பயிர்கள் தப்பிக்கும் என்றார்.