முதல்-மந்திரி பதவிக்காக அரசை கவிழ்க்க சித்தராமையா முயற்சி கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும் எடியூரப்பா பரபரப்பு பேட்டி

முதல்-மந்திரி பதவிக்காக அரசை கவிழ்க்க சித்தராமையா முயற்சிப்பதாகவும், இதனால் கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும் என்றும் எடியூரப்பா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

Update: 2019-06-24 23:28 GMT
பெங்களூரு,

பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா முதல்-மந்திரி குமாரசாமி மேற்கொண்டுள்ள கிராம தரிசனம் நிகழ்ச்சியால், அந்த கிராமங்கள் எந்த விதமான வளர்ச்சியும் அடையவில்லை என்பதை விளக்கமாக எடுத்துக்கூறும் வகையிலும், இதற்கு முன்பு குமாரசாமி கிராம தரிசனம் செய்த கிராமங்களின் தற்போதைய நிலை, அதற்கான புகைப்படங்கள், ஆதாரங்களுடன் கூடிய புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-மந்திரி குமாரசாமி கிராம தரிசனம் மேற்கொண்டு நாடகமாடி வருகிறார். அவரது இந்த நாடகத்தை மாநில மக்கள் நம்ப மாட்டார்கள். இதற்கு முன்பு பா.ஜனதாவும், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த போதும் குமாரசாமி கிராம தரிசனம் நிகழ்ச்சியை நடத்தினார். குமாரசாமி கிராம தரிசனம் மேற்கொண்ட எல்லா கிராமங்களும் அதே நிலையில் தான் தற்போதும் இருக்கிறது. அங்கு எந்த விதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை.

குறிப்பாக அந்த கிராமங்களில் குடிநீர், சாலை உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை. அடிப்படை வசதிகளுக்காக அந்த கிராம மக்கள் ஏங்கும் நிலை உள்ளது. இதற்கான ஆதாரங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளேன். கிராம தரிசனத்தின் மதிப்பு வெறும் பூஜ்ஜியம் தான். இந்த கிராம தரிசனம் குறித்த 10 கேள்விகளை எழுப்பி உள்ளேன். அந்த கேள்விகளுக்கு குமாரசாமி பதில் அளிக்க வேண்டும்.

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்தே மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஒவ்வொரு துறையிலும் ஊழல் மட்டுமே நடக்கிறது. ஆனால் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதாகவும், வளர்ச்சி பாதையில் மாநிலம் செல்வதாகவும் கூறி மக்களை, முதல்-மந்திரி குமாரசாமி ஏமாற்றுகிறார். இதுவரை நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்து ஊழலில் ஈடுபட்டு அரசை வழி நடத்தினார். தற்போது அவர் கிராம தரிசனம் மேற்கொண்டுள்ளார்.

முதல்-மந்திரி பதவியின் மீது நான் ஆசைப்படுவதாகவும், கனவு காண்பதாகவும் சித்தராமையா கூறி இருக்கிறார். நான் முதல்-மந்திரி பதவிக்கு ஆசைப்படவில்லை. சித்தராமையா தான் மீண்டும் முதல்-மந்திரி ஆக நினைக்கிறார். சித்தராமையாவுக்கு முன்பாகவே நான் முதல்-மந்திரி பதவி வகித்துள்ளேன். முதல்-மந்திரி பதவிக்காக கூட்டணி அரசை கவிழ்க்க சித்தராமையா முயற்சி செய்கிறார். ஆனால் அரசை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்வதாக மக்களிடையே தவறான தகவல்களை கூட்டணி கட்சி தலைவர்கள் பரப்புகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் படுதோல்வி அடைந்ததால், கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த அரசு தொடர்வதை கூட்டணி தலைவர்களே விரும்பவில்லை. முதல்-மந்திரி குமாரசாமியின் செயல்பாடுகளால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். கூட்டணி ஆட்சியை மக்கள் வெறுத்து விட்டார்கள்.

கூட்டணி ஆட்சியின் ஒவ்வொரு நடவடிக்கையும் பா.ஜனதா உன்னிப்பாக கவனித்து வருகிறது. கூட்டணி அரசுக்கு முடிவு காலம் வந்து விட்டது. இதனால் கூடிய விரைவில் இந்த கூட்டணி ஆட்சி கவிழும். குமாரசாமியின் கிராம தரிசனத்தை வேண்டும் என்றே குறை சொல்லவில்லை. அவர் கிராம தரிசனம் செய்த கிராமங்களில் உள்ள தற்போதைய நிலையை முழுமையாக அறிந்த பின்பே சொல்கிறேன். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்