சர்வதேச ஓட்ட போட்டிக்கு குமரி மாணவி தேர்வு

சர்வதேச ஓட்ட போட்டிக்கு குமரி மாணவி லிபோனா ரோஸ் ஜின் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2019-06-24 22:45 GMT
நாகர்கோவில்,

நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் சஜின், கூலி தொழிலாளி. இவருடைய மகள் லிபோனா ரோஸ் ஜின் (வயது 14). இவர் வாவறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் அதிகம். இதற்காக கடுமையாக பயிற்சி பெற்று வந்தார்.

மாவட்ட மற்றும் தேசிய அளவில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று இதுவரை 14 தங்கப்பதக்கங்கள் பெற்றுள்ளார். கடந்த வாரம் கோவாவில் தேசிய அளவில் ஜூனியர் பிரிவுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற லிபோனா ரோஸ் ஜின் 400 மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

இதையடுத்து ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான ஓட்டப்பந்தய போட்டிக்கு லிபோனா ரோஸ் ஜின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாராட்டு

இந்த நிலையில் லிபோன ரோஸ் ஜின் நேற்று தோவாளையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரத்தை சந்தித்து பாராட்டு பெற்றார். அப்போது பள்ளிகள் மேம்பாட்டு விளையாட்டு அமைப்பின் சேர்மன் பத்மேந்திரா, அமைப்பின் தலைவர் ஆறுமுகம் பிள்ளை, பொருளாளர் அஸ்ரி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் பத்மேந்திரா சார்பில் லிபோன ரோஸ் ஜின்னுக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்