கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை குளங்களை தூர்வார கோரிக்கை

குளங்களை தூர்வார வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-06-24 22:00 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 பஞ்சாயத்துகளை குருவிகுளம் யூனியனில் இருந்து பிரித்து, கோவில்பட்டி யூனியனில் சேர்க்க வேண்டும். இளையரசனேந்தல் பிர்கா பகுதிகளுக்கு மானூர் குடிநீர் திட்டத்தில் சீராக குடிநீர் வழங்க வேண்டும். தமிழக அரசு வெளியிட்ட நிலத்தடி நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டிய ஊர்களின் பட்டியலில் இளையரசனேந்தல் பிர்காவும் இடம் பெற்று உள்ளது.

எனவே இப்பகுதி விவசாயிகளுக்கு அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அங்குள்ள குளங்கள், கண்மாய்கள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய விவசாயிகள் சங்கத்தினர் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சங்க மாநில தலைவர் வக்கீல் ரங்கநாயகலு தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பரமேசுவரன், ஒன்றிய இளைஞர் அணி தலைவர் கார்த்திக், ஆடு வளர்ப்போர் சங்க தலைவர் கருப்பசாமி, இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன், சுபா நகர் குடியிருப்போர் சங்க தலைவர் கனகராஜ் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர். மனுவை பெற்று கொண்ட அவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்