தனியார் லாரிகள் தண்ணீர் கட்டணத்தை குறைக்க வேண்டும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்
தனியார் லாரிகள் தண்ணீர் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.
சென்னை,
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த தனியார் குடிநீர் லாரி உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நகர நிர்வாக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் குடிநீர் லாரி உரிமையாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
தனியார் லாரிகள் மூலம் வழங்கப்படும் தண்ணீர் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்களும், செய்திகளும் வந்துள்ளன. எனவே லாரி உரிமையாளர்கள் வாகனத்தின் டீசல் செலவு, ஓட்டுநரின் சம்பளம், சுங்க வரி, இதர செலவுகள் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்றவாறு நியாயமான கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.
தண்ணீர் கட்டணம்
வசூலிக்கப்படும் கட்டணம் எல்லா வாடிக்கையாளர்களிடமும் ஒரே சீராக சரியான அளவுடன் வழங்கப்படுகிறதா? என்பதை உரிமையாளர்கள் கண்காணிக்க வேண்டும். ஒருசில இடங்களில் கட்டணங்கள் அதிகம் என்று பொதுமக்கள் கருதுவதால், அதை உடனடியாக குறைக்க வேண்டும்.
கல்குவாரிகளில் இருந்து தண்ணீரை எடுத்து பொதுமக்களுக்கு வழங்க கூடாது. ஒரே ஆதாரத்தில் இருந்து தினசரி நீர் எடுப்பதை தவிர்த்து ஒன்றுக்கு மேற்பட்ட நீர் ஆதாரத்தில் இருந்து எடுக்க வேண்டும். பதிவு வரிசைப்படி குடிநீர் வழங்கப்படுகிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் தா.கார்த்திகேயன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிகரன், மாநகர கூடுதல் கமிஷனர் (போக்குவரத்து) ஏ.அருண், காஞ்சீபுரம் கலெக்டர் பி.பொன்னையா, திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி, தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் என்.நிஜலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குடிநீர் திட்டம்
பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
மழை இல்லாவிட்டாலும் சென்னைக்கு தினமும் நெம்மேலி, மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் குடிநீரும், வீராணம் ஏரியில் இருந்து 90 மில்லியன் லிட்டர் குடிநீரும், நெய்வேலி சுரங்கத்தில் இருந்து 60 மில்லியன் லிட்டர் குடிநீரும், நெய்வேலி பகுதியில் ஏற்கனவே உள்ள 22 ஆழ்துளை கிணறுகளில் இருந்து 20 மில்லியன் லிட்டர் குடிநீரும், இதே பகுதியில் புதிதாக போடப்பட்டுள்ள 9 ஆழ்துளை கிணறுகளில் இருந்து 10 மில்லியன் லிட்டர் குடிநீரும், திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம், பூண்டி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள தனியார் ஆழ்துளை கிணறுகள் மூலம் 110 மில்லியன் லிட்டர் குடிநீரும், மாகரல்- கீழானூர் பகுதிகளில் குடிநீர் வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட 13 ஆழ்துளை கிணறுகள் மூலம் 15 மில்லியன் லிட்டர் குடிநீரும், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் 20 மில்லியன் லிட்டர் குடிநீரும், ரெட்டை ஏரி மற்றும் எருமையூர் கல்குவாரியில் இருந்து 2 மாதத்துக்கும், செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை அயனம்பாக்கம், பெரும்பாக்கம் ஏரிகளில் இருந்து தலா 10 மில்லியன் லிட்டர் குடிநீரும் என மொத்தம் 525 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை மாநகருக்கு தினமும் வழங்கப்படுகிறது.
நிரந்தர தீர்வு
மேலும், தினமும் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போன்றவை முதல்-அமைச்சரால் விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இவ்விரு திட்டங்களும் முடிந்தால் சென்னை மாநகருக்கு தேவையான குடிநீருக்கு நிரந்தரமாக தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.