சங்கரன்கோவிலில் பெண் கொலையில் திடீர் திருப்பம்; கணவர் கைது பரபரப்பு தகவல்

சங்கரன்கோவிலில் நடந்த பெண் கொலையில் திடீர் திருப்பமாக, அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-24 22:45 GMT
சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் காமராஜர் புது கீழ 1-வது தெருவை சேர்ந்தவர் கோமதிநாயகம் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி முத்துமாரி (33). இவர்களுக்கு பூபதி, சஞ்சய் என்ற மகன்களும், அகிலேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மதியம் வீட்டில் தனியாக இருந்த முத்துமாரி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சம்பவ இடத்தை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமாரும் பார்வையிட்டார். தடயவியல் நிபுணர்களும் வந்து ஆய்வு செய்தனர். மோப்ப நாய் சோதனையும் நடத்தப்பட்டது. முத்துமாரி வீட்டில் தனியாக இருந்தபோது யாராவது மர்மநபர் பாலியல் முயற்சியில் ஈடுபட்டு, அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதுகுறித்து முத்துமாரியின் தந்தை சங்கரலிங்கம் (55) அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முதல்கட்டமாக முத்துமாரியின் கணவர் கோமதிநாயகம் மற்றும் அவருடைய உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது கோமதிநாயகத்தின் நடவடிக்கையை உற்று கவனித்தனர். அவரது பேச்சு முன்னுக்குபின் முரணாக இருந்தது. இதனால் கணவரே இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதனால் மனைவியின் உடல் தகனத்துக்கு கூட கோமதிநாயகத்தை போலீசார் அனுமதிக்கவில்லை.

விசாரணையின்போது முதலில் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு பின்னர் எனக்கு கொலை பற்றி எதுவும் தெரியாது என்று முரணாக அவர் அளித்த பதிலால் போலீசார் குழம்பி போயினர். விசாரணை தொடர்ந்து 5 நாட்கள் நீடித்தது.

போலீசாருக்கு பிடிகொடுக்காமல் இருந்த கோமதிநாயகம் தனது மனைவியை கொலை செய்த பரபரப்பு தகவலை நேற்று தெரிவித்து இருக்கிறார். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, சங்கரன்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி (பொறுப்பு) விஜயலட்சுமி விசாரித்து, கோமதிநாயகத்தை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இளம்பெண் கொலையில் திடீர் திருப்பமாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்