சரியாக பொருட்கள் வழங்காததால் ரேஷன் கடையை பெண்கள் முற்றுகை

ரேஷன் கடையில் பொருட் கள் சரியாக வினியோகம் செய்யவில்லை என்பதை கண்டித்து ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-24 23:00 GMT
பெரம்பூர்,

திருவொற்றியூர் மேற்கு பூம்புகார் நகரில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சுமார் 900 குடும்ப அட்டைதாரர்கள், பொருட் கள் பெற்று வருகின்றனர். இங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள், கடையில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களை தரக்குறைவாக பேசுவதாக கூறப்படுகிறது.

மேலும் கடையில் பொருட்களை சரியாக வழங்குவதும் இல்லை. உப்பு, டீத்தூள் போன்ற பொருட்களை கட்டாயம் வாங்கினால்தான் அரிசி, சர்க்கரை வழங்கப்படும் எனவும் ஊழியர்கள் கூறுவதாக தெரிகிறது.

பெண்கள் முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் மற்றும் மாதர் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயந்துபோன ஊழியர்கள், கடையை பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த அரசு உயர் அதிகாரிகள், ரேஷன் கடையை முற்றுகையிட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். ரேஷன் கடையில் பொருட்களை சீராக வினியோகம் செய்யவும், ஊழியர்களை இடமாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று முற்றுகையை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அந்த ரேஷன் கடைக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்