கொரடாச்சேரி அருகே செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு

கொரடாச்சேரி அருகே செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

Update: 2019-06-24 22:45 GMT
கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே தேவர்கண்டநல்லூர் ஊராட்சியில் அண்ணாமலை நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெறும் இடத்துக்கு நேற்று அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து பணிகளை நிறுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுடன், பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோர்ட்டு உத்தரவு பெற்று தான் செல்போன் கோபுரம் அமைக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கலெக்டரிடம் மனு

பின்னர் பொதுமக்கள் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் ஆனந்தை சந்தித்து, செல்போன் கோபுரம் அமைக்க அனுமதிக்க கூடாது என கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ.வை சந்தித்து செல்போன் கோபுரம் அமைப்பதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ.வும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். 

மேலும் செய்திகள்