சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்; 3 பேர் கைது

சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-24 22:30 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை ஓட்டேரி நியூ பேரன்ஸ் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவரை 20-க்கும் மேற்பட்டோர் தாக்குவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த புளியந்தோப்பு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாஜிபா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

போலீசாரை கண்டதும், வாலிபரை தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். விசாரணையில் தாக்குதலுக்கு உள்ளான வாலிபர், அதே பகுதியை சேர்ந்த தீபக்(வயது 29) என்பது தெரிந்தது.

அப்போது அங்கிருந்த தீபக்கின் தந்தை மற்றும் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தை சரமாரியாக தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் சாஜிபா, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

3 பேர் கைது

சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தை மீட்டனர். இந்த தாக்குதலில் அவர் காயம் அடைந்தார். இதனால் அவரை சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக தீபக்கின் தந்தையான ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வெங்கடேஷ்வரராவ்(62), அதே பகுதியை சேர்ந்த ஜானகிராமன் (38) மற்றும் ஜெகதீஷ்குமார் (38) ஆகிய 3 பேரையும் ஓட்டேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய கிரிபாபு (38) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் தீபக்கை தாக்கியவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்