நிலக்கோட்டை அருகே தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள்

நிலக்கோட்டை அருகே தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் நிலைக்கு கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.;

Update:2019-06-24 04:30 IST
நிலக்கோட்டை,

நிலக்கோட்டை அருகே உள்ள கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சி தோப்புப்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. வாரத்துக்கு ஒருமுறை ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் ஒரு மணி நேரம் மட்டுமே தண்ணீர் வருகிறது. இதனால் விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு குடம் தண்ணீர் ரூ.10 முதல் ரூ.15 வரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

பணம் கொடுத்து தண்ணீர் வாங்க முடியாத ஏழை-எளிய மக்கள் தண்ணீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் நிலைக்கு கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அப்பகுதியில் உள்ள தோட்டத்து கிணறுகளில் தண்ணீர் பிடித்து வருகிறார்கள்.

மேலும் நிலக்கோட்டை நகர் பகுதிக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் குழாய் வால்வுகளில் இருந்து கசியும் தண்ணீரை பிடிக்கின்றனர். சுகாதாரமில்லாத தண்ணீரை குடிப்பதால் கிராம மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் வால்வுகளில் ஒழுகும் தண்ணீரை போட்டி போட்டு கிராம மக்கள் பிடிக்கின்றனர்.

கூலி வேலைக்கு பெற்றோர் சென்று விடுவதால் மாணவ-மாணவிகளும் தண்ணீர் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் மாணவ-மாணவிகள் தண்ணீர் பிடித்து சென்ற காட்சியை பார்க்க முடிந் தது. மோட்டார் சைக்கிள், சைக்கிள்களில் குடங்களை கட்டி தண்ணீர் பிடித்து செல்கிறார்கள்.பல கிலோமீட்டர் தூரம் பயணித்து, தண்ணீர் குடங்களை பெண்கள் தலையில் சுமந்து செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. தோப்புப்பட்டி கிராமத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே தோப்புப்பட்டி கிராமத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கிராம மக்களின் நீண்டகால விருப்பம் ஆகும்.

மேலும் செய்திகள்