சட்டசபைக்கு இடைத்தேர்தல் வந்தால் மக்கள் மீது சுமை ஏற்படும் மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி

சட்டசபைக்கு இடைத்தேர்தல் வந்தால் மக்கள் மீது சுமை ஏற்படும் என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.;

Update: 2019-06-23 21:19 GMT
பெங்களூரு, 

சட்டசபைக்கு இடைத்தேர்தல் வந்தால் மக்கள் மீது சுமை ஏற்படும் என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.

இடைத்தேர்தல்

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை இந்த கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொண்டன. இதில் இரு கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தன.

இந்த தோல்விக்கு இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த நிலையில் தேவேகவுடா, சட்டசபைக்கு இடைத்தேர்தல் வரும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதை மறுத்த குமாரசாமி, கூட்டணி அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று கூறினார்.

மக்கள் மீது சுமை

இந்த நிலையில் மத்திய அரசின் உரம் மற்றும் ரசாயனத்துறை சார்பில் பெங்களூரு நெலமங்களாவில் ஜனரிக் மலிவு விலை மருந்து கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அந்த துறையின் மந்திரி சதானந்தகவுடா கலந்து கொண்டு மருந்து கடையை திறந்து வைத்தார் பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபைக்கு இடைத்தேர்தல் வந்தால், அது மக்கள் மீது சுமையை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையில் புதிய அரசு பதவி ஏற்று ஆட்சியை நடத்தட்டும். தேர்தலை திணிப்பது சரியல்ல. எங்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக மக்களுக்கு பிரச்சினைகளை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை.

வளர்ச்சி பணிகள் பாதிக்கும்

அவர்களால் (கூட்டணி கட்சிகள்) தங்களின் தவறுகளை சரிசெய்ய முடியாவிட்டால் விட்டு போகட்டும். எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை பயன்படுத்தி ஆட்சியை நடத்த தயாராக உள்ளோம். நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல்களால் கடந்த 3 மாதங்களாக வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டன. இப்போது சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடத்தினால் அடுத்த 50 நாட்கள் வரை வளர்ச்சி பணிகள் நடைபெறுவது பாதிக்கப்படும்.

இவ்வாறு சதானந்தகவுடா கூறினார்.

மேலும் செய்திகள்