சிமி அமைப்பின் தடையை நீட்டிப்பது குறித்து விசாரணை; கர்நாடக போலீசார் 3 பேர் சாட்சியம் அளித்தனர்

குன்னூரில் நடந்த சிமி அமைப்பின் தடையை நீட்டிப்பது குறித்து விசாரணையில் கர்நாடக போலீசார் 3 பேர் நேற்று சாட்சியம் அளித்தனர்.

Update: 2019-06-23 23:00 GMT
குன்னூர்,

சிமி என்று அழைக்கப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு 2001-ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. தொடர்ந்து 2014-ல் 5 ஆண்டு தடை நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த தடை உத்தரவு கடந்த ஜனவரி 31-ந் தேதியுடன் முடிவுக்கு வந்தது.

இந்த இயக்கம் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அதன் மீதான தடையை நீக்கலாமா? அல்லது தொடர்ந்து தடை விதிக்கலாமா என்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதுடெல்லி ஐகோர்ட்டு நீதிபதி முக்தா குப்தா தலைமையிலான தீர்ப்பாயம் பல்வேறு இடங்களிலும் இதற்கான விசாரணையை நடத்தி வந்தது.

அதன் தொடர்ச்சியாக குன்னூர் நகராட்சி கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் விசாரணை தொடங்கப்பட்டது. இதையொட்டி குன்னூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கு கோர்ட்டு வளாகமாக மாற்றப்பட்டு உள்ளது.

விசாரணைக்காக டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி முக்தா குப்தா தலைமையிலான 22 பேர் அடங்கிய குழுவினர் வந்துள்ளனர். 2-வது நாளான நேற்று கர்நாடக மாநில போலீசார் வந்தனர்.

கர்நாடக புலனாய்வு பிரிவு போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேந்திர பிரசாத், பெங்களூரு நகர உதவி போலீஸ் கமிஷனர் முகமது சாஜத் கான், இன்ஸ்பெக்டர் பிரசாத் பாபு ஆகிய 3 பேர் தீர்ப்பாயத்தில் சாட்சியம் அளித்தனர்.

அதில் கர்நாடக மாநிலத்தில் நடந்த வெடிகுண்டு விபத்து மற்றும் பல்வேறு தீவிரவாத செயல்கள் குறித்து போலீஸ் அதிகாரிகள் சாட்சியம் அளித்தனர். இந்த சாட்சியத்தின் மீது விசாரணை நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) இறுதி நாள் விசாரணையில் பொதுமக்களின் சாட்சியங்கள் நடைபெறும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்