பெலகாவி-பெங்களூரு இடையே தினமும் சிறப்பு ரெயில்: ரெயில்வே அதிகாரிகளுடன், மத்திய மந்திரி சுரேஷ் அங்கடி ஆலோசனை
ரெயில்வே அதிகாரிகளுடன் மத்திய மந்திரி சுரேஷ் அங்கடி ஆலோசனை நடத்தினார். பெலகாவி-பெங்களூரு இடையே தினமும் சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று அவர் உத்தர விட்டார்.
பெலகாவி,
ரெயில்வே அதிகாரிகளுடன் மத்திய மந்திரி சுரேஷ் அங்கடி ஆலோசனை நடத்தினார். பெலகாவி-பெங்களூரு இடையே தினமும் சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று அவர் உத்தர விட்டார்.
அடிப்படை வசதிகள்
மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்கடி, நேற்று பெலகாவியில் உள்ள கபிலேஸ்வர் ரெயில்வே பாலத்தை நேரில் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து பெலகாவியில் இருந்து உப்பள்ளிக்கு வந்த சோதனை ஓட்ட ரெயிலில் பயணித்தார். அதன் பிறகு உப்பள்ளியில் உள்ள தென்மேற்கு ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் அதிகாரிகளுடன் சுரேஷ் அங்கடி ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் ரெயில்வேத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய மந்திரி சுரேஷ் அங்கடி பேசியதாவது:-
‘ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பெலகாவி ரெயில் நிலையத்தில் 1-வது பிளாட்பாரத்தில் ரெயில்வே அருங்காட்சியக அறையை உருவாக்க வேண்டும். இதில் பெலகாவியின் உயர்ந்த கலாசாரத்தை வெளிப்படுத்த வேண்டும்.
2-வது நுழைவு வாயில்
கபிலேஸ்வர் மேம்பாலத்தில் தானியங்கி மின்தூக்கி (லிப்ட்) அமைக்க முடியுமா? என்று அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும். பாதசாரிகளின் வசதிக்காக சுரங்க பாதை அமைப்பது குறித்தும் ஆய்வு நடத்த வேண்டும். லொன்டா-மீரஜ் இடையே நடைபெற்று வரும் இரட்டை பாதை மற்றும் மின்மயமாக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
பெலகாவி ரெயில் நிலையத்தில் புதிய அலுவலக கட்டிடம் மற்றும் 2-வது நுழைவு வாயில் அமைக்கும் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும். பெலகாவியில் சம்ரி பகுதியில் சரக்கு கொட்டகை அமைக்க வேண்டும். ரெயில்வே திட்ட பணிகளை குறித்த காலத்தில் முடிக்கும் வகையில் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். பயணிகளின் பாதுகாப்பு, ஊழியர்கள் நேரம் தவறாமை, தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
சிறப்பு ரெயில்
கொத்தூர்-ஒசப்பேட்டே மற்றும் அல்னாவர்-அம்பேவாடி பாதைகளை ரெயில் போக்குவரத்திற்கு விரைவாக திறக்க வேண்டும். அடுத்த வாரத்திற்குள் பெலகாவி-பெங்களூரு இடையே தினமும் சிறப்பு ரெயில் ஒன்றை இயக்க வேண்டும். இந்த சிறப்பு ரெயில் பெலகாவியில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.
அதே போல் மறு மார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரெயில் பெலகாவிக்கு காலை 7 மணிக்கு சென்றடையும். இதில் முதல் வகுப்பு, 2-வது வகுப்பு, 3-வது ஏ.சி. பிரிவுகளுக்கு தலா ஒரு பெட்டி, படுக்கை வசதியுடன் கூடிய 7 பெட்டிகள் இடம் பெறும்.
இவ்வாறு சுரேஷ் அங்கடி கூறினார்.
இதில் பொது மேலாளர் அஜய்சிங், கூடுதல் பொது மேலாளர் பி.பி.சிங், கோட்ட ரெயில்வே மேலாளர் ராஜேஸ் மோகன், முதன்மை மின் பொறியாளர் பி.ஜி.மல்லையா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.