செவிலியர் பதவிக்கான போட்டி தேர்வை 8,597 பேர் எழுதினர்
நெல்லையில் செவிலியர் பதவிக்கான தேர்வை 8 ஆயிரத்து 597 பேர் எழுதினர்.
நெல்லை,
நெல்லையில் செவிலியர் பதவிக்கான தேர்வை 8 ஆயிரத்து 597 பேர் எழுதினர்.
செவிலியர் பதவிக்கான தேர்வு
தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியத்தால் செவிலியர் பதவிக்கான போட்டி தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் பேட்டை இந்து கல்லூரி, பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் கல்லூரி, ஜான்ஸ் கல்லூரி, மேலத்திடியூர் பி.எஸ்.என்.பொறியியல் கல்லூரி, அரியகுளம் சாராதா கல்லூரி, மேலப்பாளையம் அன்னை ஹாஜீரா மகளிர் கல்லூரி உள்பட 16 மையங்களில் தேர்வு நடந்தது.
இந்த தேர்வுக்கு 9 ஆயிரத்து 494 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் தேர்வில் 8,597 பேர் கலந்து கொண்டனர். 897 பேர் கலந்து கொள்ளவில்லை. உதவி கலெக்டர்கள் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் தேர்வை கண்காணித்தனர்.
மருந்து ஆய்வாளர்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் பாளையங்கோட்டை பொதிகை நகரில் உள்ள ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மருந்து ஆய்வாளர் பதவிக்கான போட்டி தேர்வு நடந்தது.
இந்த தேர்வுக்கு 283 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வில் 194 பேர் கலந்து கொண்டனர். 89 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. தேர்வு துணை தாசில்தார் தலைமையிலான சுற்றுகுழு அலுவலர்கள் கண்காணித்தனர். பாளையங்கோட்டை யில் உள்ள தேர்வு மையத்தில் நடந்த தேர்வை கலெக்டர் ஷில்பா பார்வையிட்டார்.
செவிலியர் தேர்வு, மருந்து ஆய்வாளர் தேர்வும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கம்ப்யூட்டர் ஆசிரியருக்கான தேர்வும் நடந்தது. தேர்வுகள் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடந்தது. ஒரே நேரத்தில் 3 தேர்வு நடந்ததால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
செவிலியர் தேர்வு மையங்களுக்கு வெளியே சில இடங்களில் தொட்டில் கட்டப்பட்டு, குழந்தைகள் தூங்க வைக்கப்பட்டு இருந்தனர். பலர் கணவருடன் வந்து இருந்தனர். சிலர் பெற்றோருடன் வந்து இருந்தனர்.