கிராமசபை கூட்டங்களில் பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்களில் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-23 21:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்களில் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிராமசபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க அபராதம் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை கைப்பற்றுதல் குறித்தும், வருகிற பருவமழை காலத்தில் மழைநீர் சேகரிக்கும் வகையில் நீர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாகவும் அனைத்து பஞ்சாயத்துகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது.

விழிப்புணர்வு

இந்த கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து கட்டிடங்கள் மற்றும் சிறு குளங்களை சுத்தம் செய்து மழைநீர் சேகரித்தல், மரம் நடும் பணிகளை மேற்கொள்ளுதல், மழைநீரை சேகரிக்க ஏதுவாக வீடுகளில், பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தல், வீட்டு உபயோகம், வேளாண்மை பணிகளுக்காக நிலத்தடி நீரை பெருக்கும் வகையில் உறிஞ்சு குழிகள் அமைத்தல், நீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி, தெருநாடகம், கிராமிய கலைகள், நடனம் நடத்துதல், நீர் பாதுகாப்பு மற்றும் நீரினை முறையாக பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சுவர் விளம்பரங்கள் வரையவும் முடிவு செய்யப்பட்டது.

பிளாஸ்டிக் பொருட்கள்

இதே போன்று தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க அபராதம் விதிப்பது குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவை பஞ்சாயத்து தலைவர் அல்லது தனி அலுவலர் நடைமுறைப்படுத்தவும், தடை செய்யப்பட்டு உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் பஞ்சாயத்துகளின் உதவி இயக்குரும் ஆய்வு செய்யலாம். குற்ற செயல்பாடு குறித்து எடுக்கப்படும் முடிவுகளின் பேரில் வரப்பெறும் மேல்முறையீடுகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பரிசீலிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்