மழைநீர் சேகரிப்பு குறித்து மாநகராட்சி கமிஷனர் விழிப்புணர்வு வீடு, வீடாக சென்று துண்டுபிரசுரம் வழங்கினார்

சென்னையில் மழைநீர் சேகரிப்பு குறித்து மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், வீடு, வீடாக சென்று துண்டுபிரசுரங்கள் வழங்கி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Update: 2019-06-23 22:45 GMT
சென்னை,

சென்னை கோட்டூர்புரம், ரஞ்சித் சாலையில் உள்ள குடியிருப்புகளில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேரடியாக சென்று மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நேற்று ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அவர் பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர் கமிஷனர் கோ.பிரகாஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வீடுகள், கட்டிடங்கள் மற்றும் தொழிற் நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதா? என துணை கமிஷனர்கள், மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களால் ஆய்வு செய்யப்படும். மேலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிப்பது குறித்தும் பொதுமக்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் முதல் கட்டமாக ஒரு வார்டுக்கு, ஆயிரம் வீடுகள் வீதம், சுமார் 2 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியமும் இணைந்து மழைநீர் சேகரிப்பது குறித்த 10 லட்சம் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்க உள்ளனர்.

பொதுமக்கள் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க ஏதுவாக தங்கள் இல்லங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைத்து அரசின் இந்த முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை என்ஜினீயர்(பாலம்) எஸ்.ராஜேந்திரன், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அற்று வாரிய தலைமை என்ஜினீயர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்