தர்மபுரி நகராட்சியில் ரூ.8¾ லட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்

தர்மபுரி நகராட்சி பகுதியில் ரூ.8¾ லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.;

Update: 2019-06-22 23:26 GMT
தர்மபுரி,

தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள 33 வார்டுகளில் 16,595 வீடுகளும், 3,500 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களும் உள்ளன. இவற்றில் உருவாகும் குப்பைகளை வீடு, வீடாக சென்று மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து ரூ.8.87 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை சிறப்பாக செயல்படுத்த வங்கி நிதியுதவிடன் 3 நவீன பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த பேட்டரி வாகனங்களின் இயக்க தொடக்கவிழா தர்மபுரி நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் மகேஸ்வரி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு குப்பை சேகரிக்கும் நவீன பேட்டரி வாகனங்களின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் சட்டம் தமிழகஅரசால் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தை தர்மபுரி நகராட்சியில் முழுமையாக அமல்படுத்தும் வகையில் நகராட்சி பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் வணிக நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் துணிப்பைகளை இலவசமாக வழங்கும் பணி நகராட்சி ஊழியர்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி பொதுமக்களுக்கு இலவச துணி பைகளையும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், இயக்குனர்கள் பொன்னுவேல், சிவப்பிரகாசம், மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, அரசு வக்கீல் பசுபதி, நகராட்சி பொறியாளர் கிரு‌‌ஷ்ணகுமார், தாசில்தார் ராதாகிரு‌‌ஷ்ணன், முன்னாள் நகராட்சி தலைவர் சுமதி, கூட்டுறவு சங்க தலைவர்கள் பெரியண்ணன், சங்கர் உள்பட அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்