ஊழல் இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதி கொள்ள வேண்டும், ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேச்சு
ஊழல் இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் உறுதி கொள்ள வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கூறினார்.
ஆனைமலை,
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆனைமலையை அடுத்த ஆழியாறில் உள்ள அறிவுத்திருக்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் சென்னை அறிவியல் நகர துணைத் தலைவருமான சகாயம் கலந்துகொண்டு பேசியதாவது:-
அனைத்து வயதினர் மீதும் மரியாதை வைத்துள்ளேன். குறிப்பாக மாணவர்கள் மீது அதிக மரியாதையும் நம்பிக்கையும் வைத்துள்ளேன். இதற்கு முக்கிய காரணம் நம் நாட்டின் சொத்து இளைய சமுதாயம்தான். எதிர்கால சமுதாயத்தை சிறப்பாக உருவாக்கிட அவர்களால்தான் முடியும். பசியில்லாத நாடும், பிணியில்லாத தேசமும், பகையில்லாத உலகமும் அமைந்திடவே அனைவரும் விரும்புகிறோம். அதில் நோய் இல்லாத சமூகம் என்ற நிலை உருவாக யோகா மிக முக்கிய பங்காற்றுகிறது. உடல் நலம் மட்டுமல்ல மன நலத்தையும் சீர்படுத்துவது யோகாதான். நாம் பிறந்த நோக்கம் என்ன என்பதை முதலில் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும். நம்மை வளர்த்த இந்த சமூதாயத்திற்காக நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழ வேண்டும்.
தானங்களில் சிறந்தது பேருண்மை தானமே என்று ஜென் தத்துவம் கூறுகிறது. யோகாவில் நிறைந்துள்ள பேருண்மையை அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்போம். நான் அதிகாரியாக முதன் முதலில் பணியில் சேர்ந்தபோது எனது அலுவலகத்தில் எழுதி வைத்தது, அதிகாரம் உனக்கு கிடைக்குமேயானால் அதனை ஏழைகளுக்காக பயன்படுத்து என்பதுதான். இன்றைய சமூகம் சந்தித்து வரும் பிரச்சினைகளில் மிக முக்கியமானது ஊழல். ஆகவே ஊழல் இல்லாத சமூகத்தை ஏற்படுத்திட அனைவரும் உறுதிகொள்ள வேண்டும்.
சத்தியத்தையும், நேர்மையையும் வாழ்வில் எப்போதும் கடைபிடிக்க வேண்டும். பலருக்கு நீங்கள் முன்மாதிரியாக இருக்கிறீர்கள். உங்களுக்கு யார் முன்மாதிரி என்று இங்கு ஒரு மாணவி கேட்டார். படிப்பறிவில்லாத, உழைப்பை மட்டுமே அறிந்த எனது தாய்தான் எனக்கு முன்மாதிரி. உனக்கு உரியது எதுவோ அதை மட்டுமே நீ அனுபவிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அவர் சொல்லிக்கொடுத்த சத்தியத்தையும், நேர்மையையும் இன்றுவரை நான் கடைபிடிக்கிறேன். இதற்காக நான் 26 முறை பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளேன்.
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியத்தோடு யோக்கியமும் தேசத்திற்கு மிக மிக அவசியமாகிறது. அறம் செய்ய விரும்பு என்பதை பாலபாடமாக கற்பித்தது தமிழ் சமூகம் மட்டுமே என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். சமீபத்தில் தேர்தல் பணிக்காக வெளி மாநிலம் சென்றபோது அங்கு ஒருவர் என்னை அடையாளம் கண்டு வணக்கம் தெரிவித்தார். அது எனது நேர்மைக்கு கிடைத்த மரியாதையாகும். அரசியல் தெரிந்து கொள்ளாவிட்டால் விரும்பத்தகாதவர்கள் உங்களை ஆட்சி செய்வார்கள் என்று சொல்வார்கள். அதனை இன்றைய தலைமுறை நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். இயற்கை வளங்களை சூறையாடி பணம் சேர்ப்பதை சிலர் பெருமையாக நினைக்கின்றனர். நம் எதிர்கால சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லும் அழியாத சொத்து இயற்கைதான். யோகாவை இன்றைய இளைய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். அத்தோடு நேர்மையையும், சத்தியத்தையும் சொல்லிக்கொடுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து அவர் பேட்டியின்போது கூறியதாவது:-
ஊழல்தான் இன்று பெரிய பிரச்சினையாக உள்ளது. அதனை தடுக்க ஊழல் தடுப்பு இயக்குனரகத்தை அரசு ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரத்தை உள்ளடக்கி இருந்த செங்கல்பட்டு மாவட்டத்தில்தான் ஆயிரத்துக்கும் அதிகமான ஏரிகளும், குளங்களும் உள்ளன. அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசுக்கு விரிவான அறிக்கை அளித்தேன். தற்போதைய தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கவும் சில யோசனைகளை வழங்க உள்ளேன். விவசாய நிலங்கள் அனைத்தும் கான்கிரீட் காடுகளாக மாறி வருகிறது. கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு படித்த, படிக்காதவர் என்ற பாகுபாடில்லாமல் ஆண்டுக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ. 1லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.