ஸ்ரீமுஷ்ணம் அருகே, கிராமமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி - தரமற்ற முறையில் தார் சாலை அமைப்பதாக புகார்
ஸ்ரீமுஷ்ணம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். தரமற்ற முறையில் தார் சாலை அமைப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே தேத்தாம்பட்டு கிராமத்தில் இருந்து கண்டியங்குப்பம் கிராமம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.80 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கண்டியங்குப்பம் கிராம மக்கள் நேற்று காலை ஒன்று திரண்டு தார் சாலை தரமற்ற முறையில் போடுவதாக கூறி, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இது பற்றி தகவல் அறிந்ததும் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலக்கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் விரைந்து சென்று கிராம மக்களை தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள் கூறுகையில், இந்த சாலையை தரமற்ற முறையில் போடுகிறார்கள். ஒரே வாரத்தில் ஜல்லிகள் பெயர்ந்து வந்து விடும். எனவே தரமான முறையில் தார் சாலை அமைக்க வேண்டும். சாலை அமைக்கும் பணி முடியும் வரையில் இந்த வழியாக லாரிகள் செல்ல அனுமதிக்கக்கூடாது என்றனர்.
அதற்கு போலீசார், இது தொடர்பாக ஒப்பந்ததாரர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.