கடலூர் அருகே பரபரப்பு, நாட்டு துப்பாக்கியுடன் 4 வாலிபர்கள் கைது

கடலூர் அருகே நாட்டு துப்பாக்கியுடன் 4 வாலிபர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-06-22 22:30 GMT
கடலூர், 

கடலூர் திருமாணிக்குழி பகுதியில் சிலர் துப்பாக்கியால் சுட்டு பறவை மற்றும் விலங்குகளை வேட்டையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரய்யா தலைமையில் போலீசார் திருமாணிக்குழி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை திருவந்திபுரத்தில் இருந்து திருமாணிக்குழி செல்லும் மலைப்பாதையில் உள்ள லிங்கம் கோவில் அருகே 4 பேர் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தனர். உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் எம்.புதூர் அருகே உள்ள புதுநகரை சேர்ந்த கண்ணன் மகன்களான வாத்து என்கிற மணிகண்டன்(வயது 27), வீரமணி(28), ஏழுமலை(30), வீராசாமி மகன் ராஜ்குமார்(22) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் நின்ற இடத்தை சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது நாட்டு துப்பாக்கியை வைத்திருக்க உரிமம் பெறவில்லை என்பதும், முயல் வேட்டைக்காக சென்றபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. மேலும் துப்பாக்கியின் உரிமையாளர் ஆர்.ஆர்.நகரை சேர்ந்த ஜீவா மகன் சக்தி தப்பி ஓடிவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட வாத்து என்கிற மணிகண்டன், வீரமணி, ஏழுமலை, ராஜ்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி மற்றும் வெடி பொருட்களையும் மீட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்