சேலம் அருகே உடல்நிலை பாதித்த, பெண் குழந்தை திடீர் சாவு - ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை

சேலம் அருகே உடல்நிலை பாதித்த பெண் குழந்தை திடீரென இறந்தது. இதனால் ஆவேசம் அடைந்த உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2019-06-22 22:45 GMT
சேலம், 

ேசலம் அருகே ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவர், அங்குள்ள ஒரு பேக்கரில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி திவ்யா (25). இவர்களுக்கு 11 மாதத்தில் ஜெர்சிகா என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று குழந்தைக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் கார்த்திக்-திவ்யா தம்பதியினர் தங்களது குழந்தைக்கு சிகிச்சை பெறுவதற்காக இரவில் ஆச்சங்குட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர் பணியில் இல்லை என கூறப்படுகிறது.

இருப்பினும், ஆஸ்பத்திரியில் இருந்த நர்ஸ் ஒருவர், அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்ததாகவும், ஆனால் சிறிது நேரத்தில் அந்த குழந்தை திடீரென இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டாக்டர் இல்லாமல் நர்ஸ் சிகிச்சை அளித்ததால் குழந்தை இறந்துவிட்டதாக அவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து அங்கிருந்தவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், குழந்தை இறந்த தகவலை அறிந்த உறவினர்கள் பலரும் ஆச்சாங்குட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வீராணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அவர்கள், குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததால் இறந்துவிட்டதாகவும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவில் டாக்டர்கள் பணியில் இருப்பது கிடையாது என்று சரமாரியாக குற்றச்சாட்டு தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்