சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவும் தயாராகும், சிவசேனா 1 லட்சம் புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு

விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சிவசேனா தனித்து போட்டியிடவும் தயாராகி வருகிறது. தேர்தலுக்குள் வார்டு வாரியாக 1 லட்சம் புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது.

Update: 2019-06-22 23:45 GMT
மும்பை,

விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சிவசேனா தனித்து போட்டியிடவும் தயாராகி வருகிறது. தேர்தலுக்குள் வார்டு வாரியாக 1 லட்சம் புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது.

உத்தவ் தாக்கரே ஆலோசனை

மராட்டியத்தில் அக்டோபர் மாத வாக்கில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கூட்டணி கட்சியான பா.ஜனதாவை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதில் சிவசேனா தீவிரமாக உள்ளது. இதற்காக அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் மாநிலம் முழுவதும் 288 தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்துள்ளது. கூட்டத்தில் 288 தொகுதிகளிலும் உள்ள நிலவரம் குறித்து பேசப்பட்டது.

இதில் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் எவை, எதில் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

தனியாக சந்திக்கவும் தயார்

மேலும் இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலை பா.ஜனதாவுடன் சேர்ந்து சந்திக்கவும், தனியாக சந்திக்கவும் திட்டங்களை வகுத்து உள்ளோம். கடந்த தேர்தலின் போது கடைசி நேரத்தில் தனியாக களத்தில் குதித்தால் அதிக இடங்களில் வெற்றி பெற முடியாமல் போனது. எனவே இந்த முறை தேர்தலை தனியாக சந்திக்கவும் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 லட்சம் நிர்வாகிகள்

இதேபோல கட்சியை பலப்படுத்த உத்தவ் தாக்கரே மாநிலம் முழுவதும் விவசாயிகளை சந்தித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் அவுரங்காபாத்தில் விவசாயிகளை சந்தித்து பேசுகிறார். மேலும் அகமதுநகர் மாவட்டத்துக்கும் செல்கிறார்.

இதேபோல கட்சியை பலப்படுத்தும் வகையில் தேர்தலுக்கு முன் மாநிலம் முழுவதும் வார்டு வாரியாக 1 லட்சம் நிர்வாகிகளை (வார்டு தலைவர்) நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிவசேனா மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

தற்போது சிவசேனாவில் கிராமத்துக்கு ஒரு தலைவர் உள்ளார் என்பது குறப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்