கள்ளக்குறிச்சி அருகே, குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் ஊராட்சியில் சமத்துவபுரம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி, குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், பொதுமக்கள் குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கு காலி குடங்களுடன் சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலையில் காலி குடங்களுடன் அணைகரை கோட்டாலம்-கள்ளக்குறிச்சி சாலையில் திரண்டனர். தொடர்ந்து அவர்கள் தங்கள் பகுதிக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி செயலாளர் செந்தில்குமார், கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.