வெளிநாட்டுக்கு சென்ற மனைவியின் நடத்தையில் சந்தேகம், பாஸ்போர்ட் முகவர் கொன்று புதைப்பு - உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை
வெளிநாட்டுக்கு சென்ற மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், பாஸ்போர்ட் எடுத்து கொடுத்த முகவர் கொன்று புதைக்கப்பட்டார். அவருடைய உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சின்னமனூர்,
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியை சேர்ந்தவர் அஜ்மல்கான் (வயது 39). அவருடைய மனைவி அனுசியா பானு (29). இவரை குவைத் நாட்டுக்கு வேலைக்கு அனுப்ப அஜ்மல்கான் முடிவு செய்தார். இதற்காக, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சொத்தங்குடியை சேர்ந்த கருணாநிதி (65) என்பவரின் உதவியை நாடினார்.
கருணாநிதி வெளிநாடுகளுக்கு பாஸ்போர்ட் எடுத்து கொடுக்கும் முகவராக வேலை பார்த்து வந்தார். இதையடுத்து அவர், அனுசியாபானுவுக்கு பாஸ்போர்ட் எடுத்து வீட்டுவேலை செய்வதற்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார். வெளிநாட்டுக்கு சென்ற அனுசியாபானு மாதந்தோறும் அஜ்மல்கானுக்கு பணத்தை அனுப்பி வந்தார்.
இதற்கிடையே அனுசியாபானு அனுப்பிய பணத்தை சேர்த்து வைக்காமல் அஜ்மல்கான் செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெரியவரவே அனுசியாபானு கடந்த 4 மாதங்களாக பணம் அனுப்பாமல் இருந்துள்ளார். இதனால் அனுசியாபானு மீது அஜ்மல்கானுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதாவது வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த கருணாநிதியின் மகன் வினோத்குமாருடன், அனுசியாபானுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்தார். இதனால் கருணாநிதியின் மீது அஜ்மல்கானுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை கொலை செய்ய அஜ்மல்கான் திட்டமிட்டார்.
இதையடுத்து கருணாநிதியை தொடர்பு கொண்ட அஜ்மல்கான், இன்னும் சிலரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்ப உள்ளதாக கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய கருணாநிதி, கடந்த 14-ந்தேதி சீலையம்பட்டிக்கு வந்தார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
கருணாநிதியின் செல்போன் எண்ணுக்கு அவருடைய மகன் வினோத்குமார் தொடர்பு கொண்டார். அவர், செல்போனை எடுக்கவில்லை. இதையடுத்து வினோத்குமார், தனது உறவினர்களுடன் சீலையம்பட்டிக்கு வந்து தேடி பார்த்தார். ஆனால் தனது தந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் வினோத்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கருணாநிதியை கண்டுபிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
குறிப்பாக கருணாநிதியுடன் யார்? யார்? செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள்? என்ற விவரங்களை சேகரித்தனர். மேலும் அவர் கடைசியாக தொடர்பு கொண்ட நம்பரை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அஜ்மல்கானுடன் பேசியது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இதையறிந்த அவர், போலீசுக்கு பயந்து போய் நேற்று முன்தினம் அரளி விதைகளை அரைத்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். விசாரணைக்காக வீட்டுக்கு சென்ற போலீசார் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் கருணாநிதியை அஜ்மல்கான் கொன்று புதைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், சீலையம்பட்டிக்கு வந்த கருணாநிதியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று கட்டையால் தாக்கி கொலை செய்ததாகவும், பின்னர் உடலை வீட்டின் முன்பு புதைத்தாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து கருணாநிதியின் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு உத்தமபாளையம் தாசில்தார் சத்தியபாமா நேற்று மாலை வந்தார். பின்னர் அவரது முன்னிலையில் கருணாநிதியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அதன்பிறகு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் குழுவினர் சம்பவ இடத்திலேயே உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
வெளிநாட்டுக்கு சென்ற மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பாஸ்போர்ட் எடுத்து கொடுத்த முகவரை கொன்று புதைத்த சம்பவம் சின்னமனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.