நிலக்கோட்டை அருகே, குழாய் உடைந்து வீணாக குளத்துக்கு சென்ற குடிநீர் - கிராம மக்கள் வேதனை
நிலக்கோட்டை அருகே குழாய் உடைந்து வீணாக குளத்துக்கு சென்ற குடிநீரால் கிராம மக்கள் வேதனை அடைந்தனர்.
நிலக்கோட்டை,
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், நூத்துலாபுரம் ஊராட்சியில் உள்ள சீத்தாபுரம், எஸ்.தும்மலப்பட்டி, விராலிப்பட்டி உள்ளிட்ட சுமார் 10 கிராமங்களுக்கு காவிரி மற்றும் வைகை ஆற்று கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாயில் சீத்தாப்புரம் பாப்பாகுளம் அருகே திடீரென்று உடைப்பு ஏற்பட்டது.
இதனால் குழாயில் இருந்து அதிக அளவு குடிநீர் வீணாகி சென்றது. கடந்த 10 நாட்களாக குழாயில் இருந்து வீணாகி செல்லும் குடிநீர் ஓடை வழியாக பாப்பாகுளம் சென்றது. இதை பார்த்த கிராம மக்கள் வேதனை அடைந்தனர்.
குடிநீர் தட்டுப்பாட்டால் தமிழகமே தவித்து வருகிறது. இந்நிலையில் பல நாட்களாக குழாய் உடைந்து வீணாகும் குடிநீரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குடிநீர் சிக்கனம் தேவை என்று அறிவுறுத்தப்படும் அரசு அறிவிப்பு பொதுமக்களுக்கு மட்டும் தானா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பல இடங்களில் இதேபோல் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் பிரச்சினை கிராமங்களில் தலைவிரித்தாடுகிறது. எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று குழாய் உடைப்பை சரி செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.