உடல்நலக்குறைவால் தம்பதி அவதி, விஷம் குடித்த பெண் பரிதாப சாவு - கணவருக்கு தீவிர சிகிச்சை
உடல்நலக்குறைவால் அவதி அடைந்த தம்பதி விஷம் குடித்தனர். இதில் பெண் பரிதாபமாக இறந்தார். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பேரூர்,
கோவையை அடுத்த காளம்பாளையம் வேதாத்திரி மகரிஷி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 46). இவருடைய மனைவி ஆனந்தி (38). இவர்கள் 2 பேரும் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்த நிலையில் தம்பதியினர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக இவர்கள் 2 பேரும் சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனாலும் அவர்கள் உடல்நிலை சரியாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தம்பதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதன்படி கணவன்-மனைவி 2 பேரும் விஷம் குடித்து அறையில் மயங்கி கிடந்தனர். இந்தநிலையில் அவர்களுடைய மகன் அங்கு சென்று பார்த்தபோது வாயில் நுரை தள்ளியபடி ஆனந்தி இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார்.
இதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்றனர். அப்போது மயங்கி கிடந்த செந்தில்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த தகவலின்பேரில் பேரூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டில் சோதனை செய்தபோது விஷம் குடிப்பதற்கு முன்பு தம்பதி எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் அவர்கள் நாங்கள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறோம். இதற்காக சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகவில்லை. இதனால் நாங்கள் யாருக்கும் தொந்தரவாக இருக்க விரும்பவில்லை. எனவே தற்கொலை செய்து கொள்கிறோம் என்று எழுதப்பட்டு இருந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதி விஷம் குடித்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.