நாகர்கோவில், சுசீந்திரம் கோவில்களில் மழைவேண்டி அ.தி.மு.க.வினர் சிறப்பு யாகம்

நாகர்கோவில், சுசீந்திரம் கோவில்களில் மழைவேண்டி அ.தி.மு.க.வினர் சிறப்பு யாகம் நடத்தினர்.

Update: 2019-06-22 22:45 GMT
நாகர்கோவில்,

மழை பெய்ய வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அ.தி.மு.க. சார்பில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அ.தி.மு.க.வினருக்கு உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் நேற்று மழைக்காக சிறப்பு யாகங்களை நடத்தினர். குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து பாலமுருகன் சன்னதி முன்பு மழைவேண்டி சிறப்பு யாகம் நடந்தது.

இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மாநகர செயலாளர் சந்துரு, எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் ஜெயசீலன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் சதாசிவம், வக்கீல் சுந்தரம், பொன்.சுந்தர்நாத், இந்துசமய அறநிலையத்துறை நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானமும் நடந்தது.

இதேபோல் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவிலில் உள்ள இந்திர விநாயகர் சன்னதி அருகில் சிறப்பு பூஜைகள் செய்து, வர்ணயாகம் நடத்தப்பட்டது. அப்போது இந்திரவினாயகர் சன்னதி எதிரே உள்ள நந்தி பகவானின் கழுத்துப் பாகம் வரையில் தண்ணீர் நிரப்பப்பட்டு அதில் மூலிகை செடிகள் போடப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சியிலும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், ஒன்றிய செயலாளர் அழகேசன், தம்பித்தங்கம், பொன்.சேகர், கோவில் இணை ஆணையர் அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் வர்ணயாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

மேலும் செய்திகள்